ADVERTISEMENT

ஆளுங்கட்சி குதிரைபேரம்! சுயேட்சை கவுன்சிலர்கள் கடத்தல்?

04:18 PM Jan 04, 2020 | Anonymous (not verified)

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் மற்றும் பஞ்சாயத்து துணை தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வரும் 11ம் தேதி நடக்கிறது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மட்டும் நேரடி தேர்தல் நடந்துள்ளது. மற்ற பதவிகளுக்கான தலைவர், துணை தலைவர்கள் மற்றும் ஊராட்சி துணை தலைவர்களாக அந்தந்த வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

ADVERTISEMENT

தற்போது தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திமுகவும், அதிமுகவும் சம இடங்களில் வென்ற இடங்களில் சுயேட்சைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தேர்தல் நடத்தப்பட்ட 27 மாவட்டங்களில் திமுக, அதிமுக தலா 13 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை பிடிக்கும் நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் சுயேட்சைகளை இழக்கும் வேலைகளை அதிமுக தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுயேட்சைகளை அதிமுகவினர் கடத்திவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மொத்த உறுப்பினர்கள் 19 பேர். இதில் திமுகவுக்கு 8 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும், அதிமுகவுக்கு 3 இடமும், பாமகவுக்கு 4 இடங்களும், தேமுதிகவுக்கு ஒரு இடமும் கிடைத்தது. 2 பெண்கள் சுயேச்சைகளாக வெற்றி பெற்றனர். இந்த சுயேச்சைகள் 2 பேரும் பாமகவில் சீட் கிடைக்காததால் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்கள். ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக கூட்டணியில் பாமக கேட்டு வருகிறது. பாமகவுக்கு ஆதரவு தர வேண்டுமானால் தங்களுக்கு துணைத்தலைவர் பதவி வேண்டும் என இருவருமே கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இருவரும் நேற்று முதல் உள்ளூரில் இல்லை.

சம பலத்தில் உள்ள இடங்களில் அல்லது ஒன்று, இரண்டு இடங்கள் குறைந்த இடங்களில் சுயேட்சைகளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவர்களை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக குதிரை பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பணம், உள்ளாட்சிகளில் கான்ட்ராக்ட் பணி ஒதுக்கீடு, கட்சி பதவி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி சுயேட்சைகளிடம் பேசி வருகின்றனர். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மூலம் இந்த பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் சுயேட்சையாக வெற்றி பெற்ற இருவரை ஆளுங்கட்சியினர் கடத்தி சென்றிருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி ஊராட்சி, கருங்குளம் ஊராட்சியில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. அங்கு ஆள் கடத்தல் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், ஆளும்கட்சி பேரம் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சேலம் ஒன்றியம், ஏற்காடு ஒன்றியங்களில் திமுக, அதிமுக சம்பலத்துடன் உள்ளது. இதனால் இரு கட்சிகளும் மறைமுக பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. அயோத்திப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் திமுக 7, அதிமுக 6, சுயேட்சைகள் 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்களை அதிமுக குறிவைத்து பேச்சு வார த்தை நடத்தி வருகிறது. கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள 11 வார்டுகளில் 5 திமுக, 5 அதிமுக கைப்பற்றியுள்ளது. சுயேட்சையாக ஜெயித்தவரிடம் அதிமுக பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாம்.

நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 15 வார்டுகளில் திமுக 7, அதிமுக 7 வார்டுகளை கைப்பற்றியது. சுயேட்சையாக ஜெயித்த பெண் வேட்பாளருக்கு துணைதலைவர் ஆசை காட்டி அதிமுகவினர் பேச்சு நடத்தி வருகின்றனர். தக்கலை ஒன்றியத்தில் அதிமுக கூட்டணி 5 இடங்களிலும் திமுக கூட்டணி 5 இடங்களிலும் என சமநிலையில் உள்ளதால் இங்கு சுயேட்சைகளை இழக்கும் வேலைகளில் அதிமுக ஈடுபட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT