Advertisment

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மாவட்டம் முழுவதும் எழும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

கரோனா தொடங்கிய நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதை அறிந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது.

கொத்தமங்கலத்தில் 95 வயது முதியவர் தள்ளாத வயதிலும் பனைமரம் ஏறி நூங்கு வெட்டி இறக்கி விற்பனை செய்து வருகிறார். அவருக்கு மாதாந்திர முதயோர் உதவித் தொகை கிடைக்க நடவடக்கை எடுக்க மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மூலம் கோரிக்கை வைத்தோம். அடுத்த நாளே அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வட்டாட்சியரின் காரில் அழைத்து வரச் செய்து உதவித் தொகைக்கான உத்தரவை முதியவருக்கு வழங்கினார். இப்படி ஏழைகளின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டை நகரில் ஒரு விழாவிற்குச் சென்றவர் விழா தொடங்க சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டதால் எதிரில் உள்ள திரு இருதய ஆண்டவர் தேவாலய வளாகத்திற்குள் சென்றார். அப்போது தேவாலய நுழைவாயிலில் 6 முதியவர்கள், மற்றும் மூதாட்டிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களிடம் விசாரித்தவர், அவர்களிடம் உங்களுக்கு முதியோர் உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதனால் இனிமேல் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறியதுடன் அருகில் நின்ற அதிகாரிகளிடம் உடனே உதவித் தொகை கிடைக்க ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.

அப்போது ஒரு மூதாட்டி எழுந்து நிற்க முடியாமல் உடல் நலமின்றி அமர்ந்திருப்பதைப் பார்த்து விசாரித்த ஆட்சியர் உமாமகேஸ்வரி, உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த உத்தரவுகளைப் பார்த்து நெகிழ்ந்த முதியவர்கள் கண்கள் கலங்க கைகூப்பி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறினார்கள். கூடியிருந்த மக்களும் மாவட்ட ஆட்சியரை நன்றியோடு பார்த்தனர்.