ADVERTISEMENT

சாதுரியமாகச் செயல்பட்ட முதிய தம்பதியினர்; வீட்டிற்குச் சென்று பாராட்டிய ரயில்வே அதிகாரி!

11:57 PM Mar 01, 2024 | prabukumar@nak…

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி (27.2.2024) தலைமைச் செயலகத்தில் சண்முகையா - வடக்குத்தியாள் அத்தம்பதியரின் வீரதீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!. எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா இந்த ரயில் விபத்தை தவிர்த்த செங்கோட்டையைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியரை புளியரையிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். அதனைத் தொடர்ந்து பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்த பாராட்டு விழாவில் இத்தம்பதியருக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி சரத் ஸ்ரீவத்சவா கவுரவித்தார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட ரயில்வே முதுநிலை பொறியாளர் எம். பிரவீனா, கோட்ட ஊழியர்கள் நல அதிகாரி டி. சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT