Skip to main content

வெள்ளத்தில் சிக்கி தவித்த வயதான தம்பதிகள் இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்பு!!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Elderly couple rescued after two days trapped in floods

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மணியம்பட்டு. இந்த ஊரைச் சேர்ந்த ஏழுமலை (75) - ஷாலினி (65) தம்பதிக்கு சொந்தமான வயல் இவர்கள் ஊருக்கு அருகே ஓடும் சங்கராபரணி ஆற்றைக் கடந்துள்ளது. இவர்கள் இந்த வயலுக்கு வேலை செய்யச் சென்றனர். இவர்கள் ஆற்றைக் கடந்து சென்றபோது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரவில்லை. அதனால் அக்கரைக்குச் சென்று தங்கள் வயல் வேலைகளை முடித்துக்கொண்டு மாலை வீடு திரும்ப நினைத்தபோது ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 

மேலும், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து அவர்கள் நிலத்தையும் சூழ்ந்துகொண்டது. வயதான தம்பதி செய்வதறியாது திகைத்தனர். உடனே இருவரும் தங்களது நிலத்தில் கட்டப்பட்டிருந்த பம்புசெட் மோட்டார் கொட்டகையின் மேல்தளத்தில் ஏறி அமர்ந்துகொண்டனர். ஆனால் தண்ணீர் வடியாததால் இரண்டு நாட்கள் மோட்டார் கொட்டகை மேல்தளத்தில் பசி பட்டினியோடு  தம்பதி காத்திருந்தனர். நேற்று (20.11.2021) ஓரளவு வெள்ளம் வடிந்த நிலையில் மோட்டார் கொட்டகையில் மேல்தளத்தில் ஏறி நின்று கத்திக் கூச்சல் போட்டுள்ளனர்.

 

ஆற்றின் அக்கரையில் இருந்தவர்கள் இவர்களின் கை அசைவுகளைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அதையடுத்து, செஞ்சியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் கொட்டகை மேற்தளத்தில் சிக்கித்தவித்த வயதான தம்பதியைக் கயிறு மூலம் கட்டி மிதவை படகு கொண்டு பத்திரமாக மீட்டு இருவரையும் கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்