மிரட்டும் கும்பலைக் கைது செய்யக் கோரி வயதான தம்பதி ஆட்சியரிடம் மனு...

An elderly couple petitioned the Collector

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் மேல்மலையனூர் பகுதியில் உள்ள வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் 70 வயது கணேசன், இவரது மனைவி 68 வயது யசோதா. இந்த வயதான தம்பதிகள் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையைச் சந்தித்து புகார்மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், "நாங்கள் இருவரும் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுக்குக் கூட வழியில்லாமல் சிரமப்படுகிறோம். இந்த நிலையில் யசோதை பெயரில் மேல்மலையனூரில், வீட்டு மனை ஒன்று உள்ளது. அந்த மனையின் பக்கத்து மனை உரிமையாளர், டாக்டர் தமிழரசன் அப்பகுதியில் அரசு மருத்துவராகப் பணியில் உள்ளார்.அவரது மனைவி அருணாதேவி.

இவர்கள் யசோதையின் மனையை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர். இது குறித்து செஞ்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி டாக்டர் தமிழரசன் மற்றும் அவரது மனைவி அருணா தேவி ஆகியோர் மிரட்டல் விடுத்து வந்தனர். இவர்களின் தூண்டுதலின் பெயரில் அதே ஊரைச் சேர்ந்த 'துண்டு பீடி' என்கிற கணேசன் தாஸ், தாயனூரைச்சேர்ந்த சண்முகம் ஆகியோர் நீதிமன்ற புகாரை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையேல், கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவருகின்றனர்.

இது சம்பந்தமாக யசோதை, வளத்தி காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மீது காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை தெரிந்துகொண்ட 'துண்டு பீடி' கணேசன் சில ரவுடி ஆட்களுடன் சேர்ந்து, எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வயதான எங்களிடம் தகராறில் ஈடுபட்டனர். எனவே எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்"என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் கணவன் மனைவி இருவரும் மனு அளித்துள்ளனர்.

வயதான தம்பதிகளை அரசு மருத்துவர் அடியாட்கள் மூலம் மிரட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்கள் மீது காவல்துறை உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe