Skip to main content

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை திட்ட தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி..!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

Eighth grade students to apply for the scholarship scheme qualifying examination registration will end tomorrow ..!

 

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.) கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான பயனாளிகள், தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

 

நடப்புக் கல்வி ஆண்டுக்கான என்.எம்.எம்.எஸ். தகுதித்தேர்வு வரும் பிப்.21ஆம் தேதி நடக்கிறது. அனைத்து வட்டாரங்களிலும் இத்தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜன.8ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 

 

தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை ஜன.12ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு, பணிகள் நடந்து வந்தன. 

 

இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி, என்.எம்.எம்.எஸ். திட்ட தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜன. 20) வரை அவகாசம் நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

யுபிஎஸ்சி தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Minister Udayanidhi Stalin who gave incentive for UPSC exam

 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி (07.03.2023) தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் திறன் இடைவெளியைக் குறைப்பதும், மத்திய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களின் விகிதாச்சாரத்தை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியைக் கட்டணமில்லாமல் வழங்குவதும் இப்பிரிவின் முக்கிய நோக்கமாகும்.

 

அந்த வகையில் 2023 - 24கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு முதல்நிலை தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ. 7,500 வீதம், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது சமீப காலமாக மத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்கத் தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சியாகும்.

 

இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 12 ஆம் தேதி (12.06.2023) வெளியான நிலையில், அதில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாகச் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, இதுவரை 435 மாணவர்களுக்குத் தலா ரூ. 25,000 வீதம் 1 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்கான ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி போட்டித்தேர்வு பிரிவால் நடத்தப்பட்ட மத்திய அரசின் முதல்நிலை தேர்வுக்கான உதவித்தொகை பெறுவதற்கானத் தேர்வு நடைபெற்றது. இதற்குத் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 52,225 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 32,638 மாணவர்கள் ஊக்கத்தொகைக்கான தேர்வை எழுதினர். அத்தேர்வில் தேர்வான 1000 மாணவர்களுக்கு 10 மாதத்திற்கு ரூ.7,500 வீதம் என ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.

 

Minister Udayanidhi Stalin who gave incentive for UPSC exam

 

இதன் தொடர்ச்சியாக, மத்திய குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலை தேர்வின் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை, நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவானது கடந்த 10.09.2023 அன்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தியது. இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி (27.09.2023)  வெளியான நிலையில், இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று (14.10.2023), சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. குடிமைப் பணிகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களைச் செலவுகளின் அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் இத்திட்டத்தை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவுக்குத் தலைமை வகித்து, மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொகைக்கான வரைவோலையினை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநருமான விக்ரம் கபூர், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தரேஷ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

Next Story

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

Incentives for UPSC Mains Candidates Apply from today

 

தமிழக அரசின் 2023 - 24 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

 

இத்திட்டத்தின் தொடக்கமாக கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி, யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி அன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும், முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

“தமிழ்நாட்டு மாணவர்களை உலகில் முதன்மையானவர்களாக ஆக்குவதே எனது தணியாத ஆசை” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

 

“கலைஞருக்கும் பிடிக்கக்கூடிய திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

 

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையின் படி இன்று (11.08.2023) முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின், நான் முதல்வன் திட்டத்தின், போட்டித் தேர்வுகள் பிரிவின் சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.