Skip to main content

எட்டு வழி சாலை - கருத்து கேட்பு கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி அளிக்க உத்தரவு

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
anbumani

 

சேலம் எட்டு வழி சாலை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வர சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான நிலங்கள் கையப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இந்த திட்டத்தினால் பாதிக்கப்படும் தர்மபுரி பாராளுமன்ற தொகுதி மக்களின் கருத்தை கேட்கும் கூட்டத்தை நடத்த, அந்த தொகுதியின் எம்.பி.யான அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். இதற்கு அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை போலீசார் நிராகரித்து விட்டனர். எனவே, போலீசாரின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார். 

 

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,     பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்களை கேட்கும் கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.  உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓரிரு வாரத்தில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
official announcement about the alliance will be made in a week Anbumani

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், இதுகுறித்து முடிவு செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் நேற்று (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

அதே சமயம் அ.தி.மு.க கூட்டணியில் தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி ஆகிய 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதியை பா.ம.க. கேட்பதாகவும், ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க அ.தி.மு.க. தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்டது. அதோடு தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் பா.ம.க. போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கையை பா.ம.க. ஏற்க தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், வடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. கூட்டணி குறித்து தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் பொய்யான செய்திகள். கூட்டணி குறித்து வெளியான செய்திகள் அத்தனையும் வதந்திகள். கூட்டணி குறித்த தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் பா.ம.க. தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்” எனத் தெரிவித்தார். 

Next Story

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதா? - அன்புமணி

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Anbumani question Will fighting for equal pay for equal work unleash oppression

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

2009 - மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம்  தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு  நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது.

ஊதிய முரண்பாடு 15 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 19 ஆம் தேதி முதல், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் முதல் நாளான 19 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து 20 ஆம் தேதியான நேற்று மீண்டும்  போராட்டம் நடத்திய போதும் அவர்களைக் காவல்துறை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தது. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து கொடுமைக்குள்ளாவதை நியாயப்படுத்தவே முடியாது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை நான் மட்டும் வலியுறுத்தவில்லை. இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின்  ஊதிய முரண்பாடு களையப்படும் என்று  வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது நியாயமற்றது.

இடைநிலை ஆசிரியர்கள் எப்போது போராட்டம் நடத்தினாலும், அதை ஒடுக்குவதே அரசின் கொள்கையாக உள்ளது. 2022ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களின்  கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் அக்குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

அதனால், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை அக்டோபர் 5ஆம் நாள் காவல்துறை விரட்டியடித்தது; பலரைக் கைது செய்தது. அப்போதும் மூவர் குழுவின் அறிக்கை அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்று அரசு மீண்டும் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் 5 மாதங்களாகியும் மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் தான் இடைநிலை ஆசிரியர்கள் இப்போது மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதியாகும்.  தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அதைவிடக் கொடுமையான அநீதியாகும். இதைத் தமிழக அரசு உணர்ந்து கொண்டு, இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.