Skip to main content

காடாகிப்போன கண்மாய்க்குள் நடந்த இரட்டைக்கொலை! -விருதுநகர் மூ.மு.க. மா.செ. உள்ளிட்ட 8 பேர் கைது!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

‘பெண் தொடர்பு! பண விவகாரம்! சிவகாசி இரட்டைக்கொலை விசாரணை தீவிரம்!’ என்னும் தலைப்பில் கடந்த 25-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தக் கொலை வழக்கில் மூவேந்தர் முன்னேற்ற கழக விருதுநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

 

 Eight people arrested for virudhungar incident


கொலை செய்யப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களான முருகன் மற்றும் அர்ஜுனன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. சிவகாசியில் வெவ்வேறு பகுதிகளில் ரத்தக்காயங்களுடன் இருவரும் சடலமாகக் கிடந்ததால் ஊரே பதற்றமானது.  கொலையான முருகனின் மனைவி சுதாவும், அர்ஜுனன் மனைவி சத்தியாவும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவாகி, போலீஸ் நடத்திய விசாரணையில்,  பண விவகாரம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து காரணமாகவே இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  சுதா, சத்தியா தந்த தகவல் மூலம் முதலில் விசாரணை வளையத்தில் சிக்கியவர் மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகனின் தந்தைதான். அதன்பிறகே, தலைமறைவாக இருந்த பாலமுருகனை காவல்துறை கைது செய்தது.

 

 Eight people arrested for virudhungar incident

 

முருகனுடனும் அர்ஜுனனுடனும் சக தொழிலாளர்களாக  சுமை தூக்கும் வேலையைச் செய்து வந்தவர்கள்தான் சின்னராமுவும் வேல்முருகனும். இவர்களுக்கிடையே பணம் சம்பந்தமாக கடந்த சில ஆண்டுகளாகவே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து மூக்கை நுழைத்திருக்கிறார் பாலமுருகன். தங்களுக்கு எதிராகவும் சின்னராமு, வேல்முருகனுக்கு ஆதரவாகவும்  பாலமுருகன் நடந்துகொண்டது முருகனுக்கும் அர்ஜுனனுக்கும் ஆத்திரத்தை உண்டுபண்ணியது. அதுதான், பாலமுருகன், சின்னராமு மற்றும் வேல்முருகனைக் கொலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.  இந்த திட்டத்தை அறிந்த ஒருவர், சின்னராமுவிடம், உங்களைக் கொலை செய்வதற்கு முருகனும் அர்ஜுனனும் ஆயத்தமாகி விட்டதாகவும்,  கூலிப்படையினருக்கு பணம் கொடுத்ததாகவும் கூறி எச்சரித்திருக்கிறார்.

சின்னராமு, வேல்முருகன் மற்றும் பாலமுருகன் தரப்பு உஷாரானது. சமாதானமாகப் பேசுவோம் என்று கூறி முருகனையும் அர்ஜுனனையும் சிவகாசி கடம்பன்குளம் கண்மாய்க்கு அழைத்தது. அடர்ந்த  கருவேல மரங்களால் பெரும் காடாகவே மாறிப்போன  அந்தக் கண்மாயில்   24-ஆம் தேதி இரவு இருவரையும் மது அருந்தச் செய்து, போதை தலைக்கேறிய நிலையில், கத்தியாலும், பீர் பாட்டிலாலும், அங்கு சுடுகாட்டில் கிடந்த கட்டைகளாலும் மாறிமாறி தாக்கியிருக்கின்றனர். ஒருகட்டத்தில், இருவரும் செத்துவிடக்கூடாது என்று பயந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முயன்றிருக்கின்றனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அது முடியாமல் போயிருக்கிறது.

 

 Eight people arrested for virudhungar incident


பலத்த ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அர்ஜுனனை தனது நண்பனான சரவணகுமாரின் டூ வீலரிலும், முருகனை மற்றொரு நபரின் டூ வீலரிலும்  அனுப்பியிருக்கிறார் பாலமுருகன். டூ வீலர்களில் இருவரையும் ஏற்றிச் சென்றவர்களோ, நேருகாலனியிலும், காரனேசன் காலனி முக்கு ரோட்டிலும் போட்டுவிட்டனர். ஏதோ போதையில் கிடக்கிறார்கள் என்று இரவு நேரத்தில் அந்த இரு ஏரியாக்களில்  அவர்களைக் கடந்து சென்றவர்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிச் சென்றுவிட, இருவரின் உயிரும் அந்த இடத்திலேயே துடிதுடித்துப் பிரிந்திருக்கிறது. விடிந்தபிறகே, அவை சடலங்கள் என்பதை அறிந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தந்திருக்கின்றனர்.
 

பாலமுருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுமை தூக்குபவர்களான சின்னராமு, சக்திவேல், வேல்முருகன், காளிராஜன், மாரீஸ்வரன், சபரீஸ்வரன் மற்றும் டிரைவர் சரவணகுமார் ஆகிய 8 பேரும் கைது செய்யப்பட்டு, சிவகாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை, நேருகாலனி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  “55 ஏக்கர் பரப்பளவுள்ள கடம்பன்குளம் கண்மாய் முன்பெல்லாம் மழை நீரினால் நிறைந்திருக்கும். இந்தக் கண்மாய் நீர்,   பள்ளபட்டி பகுதி விவசாயத்திற்கு பெரிதும் பயன்பட்டது.  பள்ளபட்டி பஞ்சாயத்தில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்கியது.   இன்றோ, அரசுத்துறையினரின் அலட்சியம் காரணமாக, கண்மாய் கருவேலங்காடாகிவிட்டது. அத்தனை சமூக விரோதச் செயல்களும் இந்தக் காட்டுக்குள்தான் நடக்கின்றன. ரவுடிகளின் புகலிடமாகிவிட்டது. இதனைத் தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.” என்றனர் வேதனையோடு.

நாம் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமாரிடம் பேசினோம். “அந்தப் பகுதி மக்கள் சிவகாசி கோட்டாட்சியரிடம் மனு அளித்தால் மக்களை அச்சுறுத்தும் அந்தக் கருவேலங்காட்டை அழிப்பதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வோம்.” என்று உறுதியளித்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதி காடாக மாறிப்போனதற்கும்,  அடிதடி, கொலை என சகலமும் நடப்பதற்கும் அரசாங்கமே காரணம் என்பதை உணர்ந்து,  புதராக மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை அகற்றி கடம்பன்குளம் கண்மாயைத் தூர்வார வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

நிர்மலா தேவி வழக்கு; ‘தண்டனை விவரம் எப்போது’ - நீதிமன்றம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில்  ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது. 

Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது, ‘உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை’ என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இன்று (29.04.2024) வழங்கியுள்ளது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆவது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்டார். அதற்கு பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் நாளை (30.04.2024) அறிவிக்கப்பட உள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த தீர்ப்பு குறித்து நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் பேசுகையில், “நிர்மலா தேவி குற்றவாளி என உறுதியாகியுள்ளது. அவருக்கு வழங்கக் கூடிய தண்டனை குறித்து விவாதம் செய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வர சொன்னார்கள். கருப்பசாமி, முருகன் ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரம் இன்றோ, நாளையோ வெளியாகலாம்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் பேசுகையில், “சமூகத்திற்கு தேவையான தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான நிர்மலாதேவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் தரப்பு எதிரிகள் மீது அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்கபடவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்களுக்கு போதுமான தண்டனைகள் வழங்கக்கூடிய சாட்சிகள் இருப்பதாக அரசு தரப்பு கருதுகிறது. எனவே இது சம்பந்தமாக மேல்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.