சத்துணவு முட்டை கொள்முதல் செய்ய பழைய முறைப்படி டெண்டர் கோர கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

Advertisment

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டை கொள்முதலுக்கான டெண்டர் காலம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.

Advertisment

e

மாநில அளவில் டெண்டர் கோரப்பட்ட கொள்கையை மாற்றி, மண்டல அளவில் டெண்டர் கோருவது என 2018 ஆகஸ்ட் 20-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையின் அடிப்படையில், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வத ற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. அதில் வெளிமாநில கோழி பண்ணைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன், ஒரு லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யும் திறனும், டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள முட்டைகளில் 60 சதவீதம் சப்ளை செய்யும் தகுதியுடைய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என தமிழக அரசு நிபந்தனை விதித்தது.

Advertisment

இதை எதிர்த்து கோழி பண்ணைகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரையும், அரசாணையையும் ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழுந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குனர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மண்டல அளவில் முட்டை கொள்முதல் செய்யும் முயற்சி தோல்வியடைந்து விட்டதால், பழைய முறைப்படி, மாநில அளவில் டெண்டர் கோருவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், புதிய டெண்டர் கோரும் வரை, தற்போது முட்டை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்கள், அதே விலைக்கு தொடர்ந்து சப்ளை செய்ய அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.