Published on 30/11/2021 | Edited on 30/11/2021

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பல பிரதான அணைகள், ஏரிகள் நிரம்பிவருகின்றன. அண்மையில் முல்லைப் பெரியாறு அணையில் 138 அடியிலேயே தண்ணீர் திறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளான நிலையில், எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் முல்லைப்பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 'உச்சநீதிமன்ற ஆணைப்படி மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை முடித்தபின் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சில இடையூறுகள் இருந்தாலும் அப்பணிகளை முடிக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.