Skip to main content

நக்கீரனின் முன்னெடுப்பு; மாணவருக்காக நடவடிக்கை எடுத்த கோட்டாட்சியர்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Effect of Nakeeran puthukottai student wrote his exam

 

கல்விக்கட்டணம் கட்ட தாமதம் ஏற்பட்டாலும் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுக்கக் கூடாது என்று அரசு கூறியுள்ளது. ஆனால் பல கல்லூரிகளில் இப்போது வரை மாணவர்களைத் தடுத்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வீரகேசவன் என்பவர் புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் கேப்பரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் கடந்த ஆண்டு படிப்பை முடித்தார். 2 பேப்பர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் அரியர் பேப்பர்களை எழுத நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற போது கல்விக்கட்டணம் பாக்கி உள்ளதால் தேர்வு எழுத அனுமதி இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் தேர்வு எழுத முடியாமல் அங்கிருந்து வெளியேறினார்.

 

இந்தத் தகவல் குறித்து நாம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், இன்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மாணவர் வீரகேசவனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நிர்வாக அலுவலர்களிடம் தேர்வு எழுதவிடாமல் திருப்பி அனுப்பியது குறித்து விசாரணை செய்த பிறகு, இன்றைய தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போதும் சிலர் தேர்வுக்கு அனுமதிக்க மறுத்துள்ளனர். மாணவரின் கல்விக்கட்டணம் நிலுவை இருந்தாலும் தேர்வு எழுதுவதைத் தடுக்கக் கூடாது என்றதும் தேர்வு எழுத அனுமதி அளித்தனர்.

 

கல்லூரி தரப்பினரோ, மாணவர் தேர்வுகளுக்கான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் மாணவர் வெளியே சென்றுவிட்டதால்தான் அன்றைய தேர்வை எழுத முடியாமல் போனது என்றனர்.

 

மாணவர் தேர்வு எழுத அனுமதி கிடைத்ததும் நம்மிடம் தகவல் கொண்டுவந்த அவரது உறவினர்கள், கோட்டாட்சியர் உள்பட நடவடிக்கை எடுக்க உதவிய அனைவரும் நன்றி கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.