அரசு அருங்காட்சியகத்தில் முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குக் கல்வி இடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கு அருங்காட்சியகவியல் தொடர்பான கருத்துரைகளும் அருங்காட்சியக பொருட்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் தொல்லியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதலோடு கல்வெட்டுகள் அமைப்பு முறைப்படி எடுக்கும் முறை தொல்லியல் தளங்களை பாதுகாத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி செய்து நடத்தி வருகிறார்.
கல்வெட்டு படி எடுத்தல் பயிற்சி: கல்வெட்டுகள் தொடர்பான அமைப்பு முறை பொதுவாக கல்வெட்டு மங்களச்சொல், காலம், மெய்க்கீர்த்தி, செய்தி, ஒம்படைக்கிளவி, எழுத்து என அமைந்திருக்கும் இவ்வாறான கல்வெட்டுகள் கொடை மற்றும் பிறவற்றிற்காக வழங்கப்படும் செய்திகளும் விளக்கப்பட்டன, சிவகங்கை பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் குறித்த செய்திகளும் விளக்கப்பட்டன. பயிற்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்வெட்டு படியெடுக்கும் முறை பற்றி ஆசிரியர் பயிற்றுநரும் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனமான புலவர் கா. காளி ராசா மாணவர்களுக்குக் கருத்துரையும் செயல் விளக்கமும் அளித்தார்.
இதில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவிகள் என 33 பேர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் களப்பயணமாகச் சிவகங்கை மாவட்டம் திருமலை சென்று நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பாறை ஓவியங்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழி எழுத்து கல்வெட்டு, சமணப் படுக்கைகள், முற்கால பாண்டியர் குடைவரை, மலைக் கொழுந்தீஸ்வரர் கோவில் மற்றும் பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் போன்றவற்றைப் பார்த்து கல்வெட்டு செய்திகளையும் தெரிந்து கொண்டனர். இவ்வாறாகப் படிக்கும் காலத்திலே திறன் சார்ந்த பயிற்சியாக இந்த கல்வி இடைப் பயிற்சி அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.