Skip to main content

கல்வித்துறை பயிற்சி கூட்டம் - திடீர் அதிகாரிகளான அதிமுகவினர்!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கல்வித்துறை அலுவலகர்களுக்கான ஒருநாள் நிர்வாக பயிற்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக 5 மாவட்டங்களில் இருந்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஒன்றிய கல்வி அலுவலர்கள் மற்றும் குறிப்பிட்ட அளவு ஆசிரியர்கள் என 200க்கும் அதிமானோர் வருகை தந்துயிருந்தனர்.

 

 


மதயிம் 12.15 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்தார். கல்வித்துறை அலுவலர்கள் மத்தியில் பேசும்போது, நிறைய ஆசிரியர்கள் இடமாற்றம் வேண்டும் எனக் கேட்கிறீர்கள். அதுவும் தென்மாவட்டத்துக்கு கேட்கிறீர்கள். அங்கு 7 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளார்கள். வடமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும், அப்படி அதிகப்படுத்திவிட்டு இடமாறுதல் கேளுங்கள் நிச்சயம் செய்துதரப்படும்.
 

முதன்மை கல்வித்துறை அதிகாரிகளுக்கு தற்போது அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு உள்ள நெருக்கடிகள் தெரியும். ஒருகாலத்தில் கண்ணை மட்டும் விட்டுவிட்டு தோலை உரித்துவிடுங்கள் என பெற்றோர்கள் சொல்வார்கள். இப்போது அதட்டிக்கூட பேசமுடியாத நிலையில் உள்ளீர்கள் என்பது தெரியும். இதை சீர் செய்ய பெற்றோர் ஆசிரியர் கழகத்தை வலிமைப்படுத்துங்கள். சரியாக செயல்படாத பெற்றோர் ஆசிரியர் கழகத்தை செயல்படுத்தி பெற்றோர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துங்கள். ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுடன் சந்திப்பை மேற்கொள்ளுங்கள். இதற்கு என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள் செய்யப்படும்.
 

 

 

அதோடு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கார்கள் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படுகிறது. ஒன்றிய அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கார்கள்  வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதேபோல் கழிப்பறையை பள்ளிகளில் சுத்தம் செய்வது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அந்த பிரச்சனையை போக்க சேவை அமைப்பு ஒன்றுடன் இணைந்து ஆயிரம் கழிவுநீர் வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் வருகைக்குப்பின் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார். அதன்பின் கனவு ஆசிரியர்களாக தேர்வானவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், 10 ஆயிரத்துக்கான காசோலை 60 ஆசிரியர்களுக்கு வழங்கினார் அமைச்சர். அதோடு கல்விக்கு சேவை செய்தவர்களாக சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
 

 

 

இந்த பயிற்சி நிகழ்ச்சி மண்டல அளவிலான நிகழ்ச்சி. இந்த பயிற்சி நிகழ்ச்சி நடந்த அரங்கில் அதிமுகவினர் 300 பேர் உள்ளே நுழைந்து நாற்காலிகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். அமைச்சர் பேசும்போது கைதட்டி கொண்டாடினர். திடீரென அதிகாரிகளாகிவிட்ட அதிமுகவினரை பார்த்து பிற மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். வெளியே செல்லுங்கள் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தும் ஒருவரும் அதைக்கேட்கவில்லை. அமைச்சர்கள் வெளியே சென்றபின்னே அதிமுகவினர் இடத்தை காலி செய்தனர். எங்க மாவட்ட அதிமுகவினரே பரவாயில்லை போல என புலம்பினார்கள் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்.

 

சார்ந்த செய்திகள்