பள்ளிகளில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளை பள்ளி ஆசிரியர்கள் தலைமையில் நடைபெறுவது வழக்கமாக இருக்கும். இந்நிலையில் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களே கல்வி வளர்ச்சி நாளை தலைமை தாங்கியும், விழா பேரூரை, வரவேற்புரை, முன்னிலை, சிறப்புரை உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் செய்தது மாணவர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மேலவீதியில் உள்ள ஆறுமுக நாவலர் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி விழாவில் 12ஆம் வகுப்பு மாணவர் ராமேஸ்வரம் தலைமை தாங்கினார். அதே வகுப்பு மாணவி கிருத்திகா அனைவரையும் வரவேற்றார். மாணவி கலைமதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக 12ஆம் வகுப்பு மாணவன் குருசந்திரன் கலந்து கொண்டு கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு குறித்தும், காமராஜர் வறுமை நிலையில் உள்ள மாணவர்களை கல்வி எவ்வாறு உயர்த்தும், உணவின்றி வறுமையில் வாடும் குழந்தைகளை அழைத்து உணவு ஏற்பாடு செய்து காமராஜர் கல்வி அளித்தது குறித்து விழா சிறப்புரையாற்றி பேசினார். இவ்விழாவை மாணவி லக்ஷனா தொகுத்து வழங்கினார். 12ஆம் வகுப்பு மாணவி மகேஸ்வரி நன்றி கூறினார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சி விழாவை பார்வையாளராக அமர்ந்து சிறப்பித்த பள்ளியின் செயலாளர் அருள்மொழிச்செல்வன் மாணவர்களின் திறன்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். அதேபோல் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் எஸ். குமார் மாணவர்களின் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பார்வையாளராக அமர்ந்து பார்வையிட்டு பேசுகையில் மாணவர்களின் வளர்ச்சி பற்றியும், மாணவர்களே இப்படி ஒரு விழாவை முன்னெடுத்தது சிறப்பாக உள்ளது. இதேபோல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தனி திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மாணவர்களுக்கு தலைமை பண்பு வளரும் என மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி பள்ளிக்கு 5 மின்விசிறிகளை வழங்கினார். இதில் கிரீடு தொண்டு நிறுவன செயலாளர் நடனசபாபதி, ரொட்டேரியன் மகப்பூப் உசேன் புலவர் ராகவன், பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றி சிறப்பாக பேசிய 12ஆம் வகுப்பு மாணவி ரசிகாவிற்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.