ADVERTISEMENT

“படிப்பு மட்டும்தான் யாராலும் திருட முடியாத நிலையான சொத்து” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

11:32 PM Jul 15, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து நூலகத்தில் இருந்த வருகைப் பதிவேட்டில், “கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை மதுரையில் திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அயராது உழைப்போம், வாழ்க கலைஞர்” என தனது கருத்துகளை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். நூலகத் திறப்பு விழாவில் ஹெச்.சி.எல் குழுமத் தலைவர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நூலகத்தில் உள்ள அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த குழந்தைகளிடம் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார். முன்னதாக நூலகத்தின் வாயிலில் உள்ள கலைஞர் சிலையை முதல்வர் திறந்து வைத்து கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்புக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அன்றைக்கு இருந்த சமூகச் சூழலும், அரசியல் சூழலும் கலைஞருக்குள்ளே இருந்த போராளியும் அவர் விரும்பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனதற்கு காரணம். ஆனால், கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம். கலைஞரை முதலில் பார்த்தபொழுது அண்ணா சொன்னது நன்றாகப் படி. அண்ணா மட்டுமில்லை, இன்றைக்கு நான் கூட மாணவர்களைச் சந்திக்கின்ற போது சொல்வது 'நல்லா படியுங்கள்' 'நல்லா படியுங்கள்' என்பதுதான். படிப்பும், வேலைவாய்ப்பும் நம்முடைய உரிமை என்று கிளர்ந்தெழுந்த இனம்தான் திராவிட இனம். எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் யாரும் கைவிடக் கூடாது. படிப்பு மட்டும்தான் யாராலும் திருட முடியாத நிலையான சொத்து. அந்தப் படிப்பை நாம் எல்லோரும் அடையவேண்டும் என்று கலைஞர் உருவாக்கியது தான் இன்றைய நவீன தமிழ்நாடு.

இன்றைக்கு தமிழ்நாட்டில் பார்க்கின்ற பெரும்பாலானவை கலைஞரால் உருவாக்கப்பட்டவை. ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு முதலில் தேவை கல்வி. அதை முதலில் கொடுத்தது திராவிட இயக்கத்தின் தாய்க்கட்சியான நீதிக்கட்சி. கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது தி.மு.கவுடைய ஆட்சி. புதுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த பெருந்தலைவர் காமராசரே 'எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது. கலைஞரிடம் சென்று சொல்லுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்.

அந்த பெருந்தலைவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்தவர் கலைஞர். அந்த நாளில்தான் இந்த நூலகத்தை இன்றைக்கு திறந்து வைத்திருக்கிறோம். முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளை அதிகப்படுத்தினார். அனைத்துப் பள்ளிகளிலும், நூலகம் அமைத்தார். உடற்கல்வியை கட்டாயம் ஆக்கினார். அறிவியல் பாடங்களை அதிகப்படுத்தி அறிவியல் கூடங்களை அமைத்தார். பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினார். சத்துணவில் வாரம் 5 நாட்கள் முட்டைகளை வழங்கினார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அமைத்தார். கிராமப்புற மாணவர்களுக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் சலுகைகள் கொடுத்தார். அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கினார். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். கணினிப் பாடத்தை அறிமுகம் செய்தார்.

தி.மு.க.வின் முதல் ஆட்சிக்காலத்திலேயே தமிழ்நாட்டில் ஏராளமான அரசுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் 68 தான். ஆனால், கலைஞர் முதலமைச்சராக இருந்த 1969 முதல் 1975 வரையிலான காலக்கட்டத்தில், அதாவது ஏழு ஆண்டுகளில் 97 அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கோவையில் வேளாண் பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடைப் பல்கலைக் கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம், ஏராளமான மருத்துவக் கல்லூரிகள். இளநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ரத்து. இப்படி கல்வியைக் கொடுத்துவிட்டால் ஒரு மனிதருடைய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்று அதற்கான மொத்த அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தது கலைஞருடைய தி.மு.க. ஆட்சி. இதனுடைய தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT