Skip to main content

நேர்மையான அதிகாரிகளுக்கு செக்! எடப்பாடி ஆட்சியில் தொடரும் கொடுமை!!

 

நேர்மையான அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்படுவது அல்லது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படும் நடவடிக்கைகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தொடர்ந்து வருவது, உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
 


துக்ளக் தர்பார் நடத்தி வரும் அதிமுக, கடந்த 2011ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தங்களை தேர்ந்தெடுத்த மக்களை மட்டுமின்றி, நேர்மையாக பணியாற்றி வரும் அதிகாரிகளையும் பாடாய் படுத்தி வருகிறது. கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்று பெயரெடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன், ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் முதல் சில நாள்களுக்கு முன் இடமாறுதல் செய்யப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் வரையிலும், ஆளுங்கட்சியினரின் அராஜக நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள். அதேநேரம், ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டும் அதிகாரிகளுக்கு இந்த அரசு எப்போதும் ரத்தினக் கம்பளம் விரிக்கத் தவறியதில்லை. அதிமுக ஆட்சியின் ஊழலுக்குத் துணை போகாததால், அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த அழுத்தத்தால், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விரும்பத்தகாத நிகழ்வுகளும் இந்த ஆட்சியில் நடந்துள்ளன.

 

ceo-ganeshmoorthi-salemஇது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான கணேஷ்மூர்த்தி, முதல்வரின் மாவட்டத்தில் பொறுப்பேற்று பதினொரு மாதத்திற்குள்ளாகவே திடீரென்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். விடிந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற நிலையில், ஜூன் 7ம் தேதியன்று இரவோடு இரவாக, எவ்வித காரணமும் சொல்லாமல் அவரை காத்திருப்போர் பட்டியலில் தள்ளியிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. 
 


மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகளுக்கு எந்த பணியிடமும் நிரந்தரம் இல்லைதான். இடமாறுதல் என்பது அவர்களின் பணிக்காலத்தில் இயல்பான ஒன்று. ஆனால், கணேஷ்மூர்த்தியை இடமாறுதல் செய்யாமல், காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்புவது என்பது, பள்ளிக்கல்வித்துறையில் இதுவரையிலும் நடந்திராத ஒன்று.


 

 


''முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, எந்தப்பள்ளியில் ஆய்வுக்குச் செல்வதாக இருந்தாலும், மதிய உணவுக்காக அவர் எலுமிச்சை அல்லது புளி சோறு பார்சல் எடுத்துச் சென்று விடுவார். அவருடைய ஜீப்பிலேயே அமர்ந்து சாப்பிட்டுவிடக்கூடியவர். தேநீர் கொடுத்தாலும்கூட, எனக்கு தேநீர் குடிக்கும் பழக்கம் இல்லை என்று நாசூக்காக மறுத்துவிடுவார். அவருக்கு மரியாதை நிமித்தமாக போர்த்தப்படும் சால்வைகளைக்கூட, அப்பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு போர்த்திவிட்டுச் சென்று விடுவார். அந்தளவுக்கு படுசுத்தமான அதிகாரி,'' என்கிறார்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.

 

admk-elangovanஅவர் மீதான பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைக்கான காரணம் குறித்து ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் விசாரித்தோம். முதல்வரின் நிழல்போல் செயல்படும்,  ஜெயலலிதா பேரவை செயலாளரான பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் உடனான உரசல்தான் காரணம் என்கிறார்கள்.
 


''முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, இந்த மாவட்டத்திற்கு வந்ததில் இருந்தே ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டதே இல்லை. முதல்வர் மாவட்டத்தில் இப்படி ஒருவர், பதினொரு மாதங்கள் வரை பணியாற்றியதே பெரிய விஷயம்தான். குறிப்பாக, முதல்வருக்கு நெருக்கமான பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன், அவருடைய உறவினர் ஒருவருடைய பள்ளிக்கு அங்கீகாரம் கேட்டு சிபாரிசு செய்திருந்தார். 
 


ஆனால் அந்தப்பள்ளியில், அரசு விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லை. பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறைகளிடம் பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ்களும் அப்போது அந்தப்பள்ளி நிர்வாகம் பெற்றிருக்கவில்லை. இந்த நடைமுறைகளை முடிக்காமல் அங்கீகாரம் தர முடியாது என்று கணேஷ்மூர்த்தி கறாராகச் சொல்லிவிட்டார். 
 


இது தொடர்பாக இளங்கோவன் மீண்டும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் செல்போனில் பேச முயன்றபோது, அவரோ தன் உதவியாளரிடம் செல்போனைக் கொடுத்து, 'அய்யா பிஸியாக இருக்கிறார். அப்புறம் பேசச்சொன்னார்,' என்று சொல்ல வைத்திருக்கிறார். இது, இளங்கோவனை ரொம்பவே எரிச்சல் படுத்தியது. மக்களவை  தேர்தல் அறிவிப்பு வெளியான அன்று, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகளை வழங்கி விடுமாறு இளங்கோவன் கூறியுள்ளார். அதற்கும் கணேஷ்மூர்த்தி, தேர்தல் நடத்தை விதிகளைக்கூறி, லேப்டாப்புகளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். இதுவும், இளங்கோவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
 


அதேபோல், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, ஒரு பிரபலமான தனியார் கிறிஸ்தவ பள்ளியில் ஒரு மாணவியை சேர்க்கக் கேட்டும், 'அந்தப்பள்ளியில் நான் சொன்னால் கேட்கமாட்டார்கள். தகுதி இருந்தால் மாணவிக்கு இடம் கிடைத்துவிடும்' என்று பெயரளவுக்கு ஒரு காரணத்தைச் சொல்லி நழுவிவிட்டார். 'ஆளுங்கட்சி எம்எல்ஏ சொல்லியும், ஒரு அட்மிஷன்கூட போட்டுத்தர முடியாதவர் எல்லாம் எப்படி முதல்வர் மாவட்டத்தில் வேலை பார்க்கிறாரோ' என்று அப்போதே வெங்கடாசலம் எம்எல்ஏ சலித்துக்கொண்டார்.
 


இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மே 26ம் தேதியுடன் முடிந்த நிலையில், சமயம் பார்த்து முதன்மைக்கல்வி அலுவலரை பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் காத்திருப்போர் பட்டியலில் மாற்ற வைத்து பழிவாங்கி விட்டார். அதற்கேற்றார்போல், அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய டெட் தேர்வுக்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை, இரவு வரை இழுத்தடித்ததில் ஆசிரியர்களுக்கும் அவர் மீது ஏகத்துக்கும் அதிருப்தி. எல்லாவற்றையும் சேர்த்து கணக்கு தீர்த்துவிட்டார்கள்,'' என்கிறார்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.
 


முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2010ம் ஆண்டு நேரடியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியில் சேர்ந்தவர். இத்துறைக்கு அவர் வந்து மொத்தமாக 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போதுவரை ஐந்து முறை இடமாறுதல்  செய்யப்பட்டிருக்கிறார். எந்த இடத்திலும் அவர் முழுமையாக மூன்று ஆண்டுகள் பணியாற்றியதில்லை. 
 


சேலத்திற்கு வருவதற்கு முன்பு, அவர் கரூர் மாவட்டத்தில் பணியாற்றினார். அங்கு தனக்குக் கீழ் உள்ள ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின்பேரில் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் சிக்க வைத்திருக்கிறார் கணேஷ்மூர்த்தி. சேலம் வந்த பிறகும்கூட, அவரிடம் முறைத்துக்கொள்ளும் சங்க நிர்வாகிகளிடம், 'நீங்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்தாலும் இல்லாவிட்டாலும்கூட, ஓராண்டுக்குள் எப்படியும் என்னை எங்கேயாவது தூக்கியடித்து  விடப்போகிறார்கள்,' என்று அடிக்கடி கூறிவந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் சிலர்.


 

 

chandrasekar-teacher
இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் சந்திரசேகர் நம்மிடம் பேசினார்.
 


''முதன்மைக்கல்வி அதிகாரியின் கீழ் உள்ள ஒட்டுமொத்த பணியாளர்களும் வேலை பார்த்ததாக வரலாறு இல்லை. ஆனால் அதை முறியடித்து, எல்லோரிடமும் சரியாக வேலை வாங்கினார் கணேஷ்மூர்த்தி. ஒரு சங்க பொறுப்பாளராக நாங்கள் அவரிடம் ஏதாவது சிபாரிசுக்கு சென்றாலும்கூட அதை அவர் ஏற்க மாட்டார். பள்ளி க்கல்வித்துறை இயக்குநரைக்கூட நாங்கள் எளிதில் நேரில் சந்தித்து விட முடியும். ஆனால், கணேஷ்மூர்த்தியை அத்தனை சீக்கிரத்தில் சந்திக்க முடியாது என்பது வருத்தம்தான். அரசியல்வாதிகளுக்கும் அதே நிலைதான். இதில், ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களின் அதிருப்தியையும் அவர் சம்பாதித்து இருந்தார். ஆனாலும், ஐஏஎஸ் அதிகாரி சகாயம்போல அவரும் மிகுந்த நேர்மையான அதிகாரி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 


கடந்த காலங்களில், பெரும்பாலான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தனர். அதிகாரியுடனான நெருக்கத்தைக் காட்டி, முறையாக பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால், அவர்களை எல்லாம் ஒழுங்காக பள்ளி பணியாற்ற வைத்தார் கணேஷ்மூர்த்தி. எங்களுடைய அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், நேர்மையான அதிகாரியான அவர் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
 


கணேஷ்மூர்த்தியுடன், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் என்பவரும் ஜூன் 7ன் தேதி திடீரென்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவரும் ஆளுங்கட்சியினரின் சிபாரிசுகளை ஏற்காததால்தான், நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார் என்கிறார்கள். இத்தனைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். இருவரும், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
 


இது ஒருபுறம் இருக்க, அய்யண்ணனை சேலம் மாவட்டத்திற்குக் கொண்டு வருவதற்காகவே கணேஷ்மூர்த்தியை பலிகடாவாக்கி இருப்பதாகவும் ஒரு சாரார் சொல்கின்றனர். அய்யண்ணன் அல்லது நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக உள்ள உஷா ஆகியோரில் ஒருவர், விரைவில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றப்படலாம் என்றும், கணேஷ்மூர்த்தியை டம்மியான பணியிடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் யூகங்கள் கிளம்பியுள்ளன.


அதிமுக ஆட்சியில், நெஞ்சின் உரத்திற்கும் நேர்மைத்திறத்திற்கும் கிடைக்கும் பரிசு, ஒன்று இடமாறுதல் அல்லது மரணம்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...