ADVERTISEMENT

பிரச்சாரத்தில் எடப்பாடியும் மு.க.ஸ்டாலினும் எப்படி? -தேர்தல் கணக்கில் யார் தெளிவு?

09:29 PM Mar 26, 2019 | cnramki

ADVERTISEMENT

பொதுத்தேர்தலில் அரசியல் தலைவர்களின் பிரச்சார வியூகமும், மக்களின் எதிர்வினையும் அரசியல் நோக்கர்களால் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றன. அந்தவகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரின் தேர்தல் பிரச்சாரமும் எந்த அளவுக்குப் பொதுமக்களைச் சென்றடைந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்!

ADVERTISEMENT

மார்ச் 19-ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் 26-ஆம் தேதி நிறைவு பெற்றிருக்கிறது. 20-ஆம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கினார் ஸ்டாலின். அவர் சென்ற இடத்திலெல்லாம் மக்களின் எழுச்சி. அதனால், அறிவாலயத் தரப்புக்கு அத்தனை உற்சாகம். இதுகுறித்து, உளவுத்துறையினர் ‘நோட்’ போட்டிருக்கின்றனர். அத்துறையின் சோர்ஸ்களிடமிருந்து தகவல்களைக் கறந்தோம்.


மோடி புகழ் பாடும் எடப்பாடி!

20-ஆம் தேதி நாகை(தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஸ்டாலின், திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி, திருவாரூர் இடைத் தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவு திரட்டினார். அதே நாளில், சேலம் நெய்க்காரப்பட்டியில் அதிமுக வேட்பாளர் சரவணன் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர், “130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவைப் பாதுகாப்பதற்கு தகுதியான ஒரே பிரதமர் மோடிதான். அவரது தலைமையில் வலிமையான பாரதம் அமைய வேண்டும் என்பதற்காகவே பிஜேபி கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். மோடியின் ஆட்சி 5 ஆண்டுகள் சிறப்பாக நடந்துள்ளது. மத்தியில் வலிமையான, நிலையான ஆட்சியை பிரதமர் மோடியால்தான் தர முடியும்” என்று வார்த்தைக்கு வார்த்தை மோடி புகழ் பாடினார். இதைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினரே ரசிக்கவில்லை.

வெலவெலப்பு.. பாய்ச்சல்.. புலம்பல்!

21-ஆம் தேதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முசிறி தாத்தையங்கார் பேட்டை பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கிற்கு யார் காரணம் என்பதை விலாவாரியாகப் புட்டுப்புட்டு வைத்தார். இதனால், வெலவெலத்துப் போன எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவிலிருந்து வந்த வழக்கறிஞர் பாபுமுருகவேலை, தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்கவைத்து, ஸ்டாலின் மீது புகார் மனு கொடுக்கச் செய்தார். அதாவது, தேவையில்லாமல் கொடநாடு வழக்கை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மீது அவதூறு பரப்புவதாக புகார் கொடுக்க வைத்தார்.

மார்ச் 22-ஆம் தேதி சேலம் மாவட்டம் கருமந்துறையில், செல்வ விநாயகர் கோவிலில் வழிபட்டு, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், சேலம் அதிமுக வேட்பாளர் சரவணன் ஆகியோரை ஆதரித்து வீதி வீதியாக அவர் வாக்கு சேகரித்தார். ஆனால், வழி நெடுகிலும் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாததால் நொந்து போனார். சில இடங்களில் ஆளே இல்லாத சாலையில் அவர் கும்பிடு போட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அதே நாளில், திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என, பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது உயர்நீதிமன்றம். அதனால், என்ன பேசுவதென்று தெரியாமல், ரூ.2 ஆயிரம் நிதி வழங்கும் திட்டத்தை திமுக நிறுத்திவிட்டதாக அக்கட்சி மீது பாய்ந்தார். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், தற்போது வழங்க மாட்டோம் என நீதிமன்றத்தில் முதல் நாள் சொல்லிவிட்டு, மறுநாள் திமுக மீது குண்டைத் தூக்கிப் போட்டார்.

மார்ச் 23-ஆம் தேதி, அரூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த அ.தி.மு.கவை இன்றைக்கு அமித்ஷாவிடம் கொண்டு சென்று அடகு வைத்திருக்கிறார்கள். மார்வாடி கடையில் அடகு வைத்தால் கூட மீட்டு விடலாம். ஆனால், அமித்ஷாவிடம் நீங்கள் அடகு வைத்திருக்கின்றீர்களே, அதை மீட்கவே முடியாது” என்று போட்டுத் தாக்கினார். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணியையும் ஒருபிடி பிடித்தார். “மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினார். ஆனால், இன்றைக்கு அவரின் நிலை என்ன அன்புமணியிடம் கம்பீரம் இல்லை, முகத்தில் மலர்ச்சி இல்லை. கட்டாயப்படுத்தி அவரைத் தேர்தலில் நிற்க வைத்திருக்கின்றனர். எனவே, இப்பொழுதும் நாங்கள் சொல்கிறோம், இன்னும் வேட்பு மனு வாபஸ் வாங்குவதற்கு நாட்கள் இருக்கின்றன.

அந்த நாளுக்குள் நீங்கள் வாபஸ் வாங்கி விட்டால், உங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். 10 அம்ச கோரிக்கை வைத்திருக்கிறோம் என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். அந்த 10 அம்ச கோரிக்கையில், சென்னையில் இருந்து சேலம் வரையிலும் போடக்கூடிய எட்டு வழிச் சாலை இருக்கிறதா? அதற்காகப் போராடினீர்களே? எனவே, கூட்டணி என்கிற பெயரில் கொள்கையை அடகு வைத்து மக்களுக்குத் துரோகம் செய்திருக்கும் கட்சி தான் பா.ம.க. என்பதை நான் இங்கு அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறேன்.” என்றார்.

ஸ்டாலினுக்குப் பதில் அளிக்க வேண்டிய அன்புமணியோ, “எங்களை ஸ்டாலின் திட்டுகிறார்” என ஒண்ணாங்கிளாஸ் டீச்சரிடம், கண்ணைக் கசக்கி நிற்கும் குழந்தைபோல, திறந்த வேனில் புலம்புகிறார். அவருக்குப் பக்கத்தில் நின்ற எடப்பாடி, ஒருபடி மேலே போய், “கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு குற்றவாளிகளை நாங்கள் சிறையில் அடைத்தால், திமுகவினர் அவர்களை ஜாமினில் எடுக்கின்றனர். எனவே, ஸ்டாலினுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்” என வேறு ரூட்டில் பேசுகிறார்.

ஒரு கட்சி விடாமல் சகட்டுமேனிக்குத் தாக்கு!

ஆறு நாட்களில் 9 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிவிட்டார் ஸ்டாலின். அதிமுக தரப்போ, இன்னும் ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்தவில்லை. எல்லா பிரச்சாரமும் திறந்த வேனில்தான். எங்கே பொதுக்கூட்டம் போட்டு மக்கள் கூடவில்லை என்றால் அசிங்கமாகிப் போய்விடுமே, என்ற அச்சமோ என்னவோ? அதே நேரத்தில் முதல்வரின் பிரச்சாரப் பட்டியலில் மார்ச் 28-ஆம் தேதி திருவண்ணாமலையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்திலேயே , 25-ஆம் தேதி இரவு ஆவடியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசிய பேச்சில் காரம் தூக்கலாக இருந்தது. “கஜா புயலால் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி இருந்தனர். நாங்கள் ஆட்சியில் இல்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அடுத்த நாளே நான் சென்றேன். எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்தார்கள். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே வந்தாரா? வரவில்லை. பத்து நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகிறார். ஏன் உடனே வரவில்லை என்று நாங்கள் கேட்டோம். என்ன பதில் வந்தது தெரியுமா? சேலத்தில் உறவினர் வீட்டில் கிடாவெட்டிக் கொண்டிருந்ததாக அவர் சொல்லவில்லையா? அதற்குப்பிறகு வேறு வழியில்லாமல் வந்தார். ஆனால், கிளைமேட் சரியில்லை என்று பாதி வழியில் திரும்பி விட்டார்.” என்று வெளுத்து வாங்கினார்.

அதோடு மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியான பிஜேபியையும் ஒரு பிடி பிடித்தார் ஸ்டாலின். “அதிமுக தேர்தல் அறிக்கையின் 20-வது பக்கத்தில் வேளாண்துறையில், சேவைத்துறையில், பொருளாதார மந்த நிலையினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றிருக்கிறது. அதற்கு மத்திய அரசு திட்டம் தீட்ட வேண்டும் என்று அதே பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பொருளாதார மந்த நிலை இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் அறிக்கை மூலமாகச் சொல்கிறார்.

அண்மையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி சென்னை வந்தார். அவர் இருக்கக்கூடிய மேடையிலேயே, முதலமைச்சர் பழனிசாமி என்ன கருத்தைச் சொன்னார் என்றால், விலைவாசி உயராமல் மோடி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 21-ல், பெரும்பான்மையான மக்கள் பாதிக்கும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து விட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை. பி.ஜே.பி-யில் இருக்கக்கூடிய தலைவர்கள் யாரும் படிக்கவில்லையா? வெட்கமில்லை, சூடு இல்லை, சொரணை இல்லை” என்று வினா எழுப்பினார். ஆனால், இன்றுவரையிலும் பிஜேபியிடம் இருந்து பதில் இல்லை.

சுவாரஸ்யம் மிஸ்ஸிங்!

முதல் 5 நாட்கள், சாதாரண மைக் பிடித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, அன்புமணியின் ஆலோசனைப்படி, வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் போது, அதி நவீன மைக்கை பயன்படுத்தினார். அவரது பேச்சிலோ, எந்தவித சுவராஸ்யமும் இல்லை. 1974-லில் இருந்து நான் கட்சியில் இருக்கிறேன். படிப்படியாக உழைத்து இன்று முதலமைச்சராக வந்திருக்கிறேன். (அன்று சசி காலில் விழுந்ததை நாசூக்காகச் சொல்கிறாரோ என்னவோ?) வலிமையான பிரதமராக மோடி திகழ்கிறார் என பிஜேபியின் புகழ்பாடுவதாகவே எடப்பாடியின் பேச்சு இருந்தது.

ஹீரோவோ, வில்லனோ, ஒருவர் சொதப்பினாலும் அந்த சினிமா ‘பிளாப்’ ஆகிவிடும். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. மக்கள் மனநிலையை நிச்சயம் அறிந்திருப்பார் எடப்பாடி. தேர்தல்களம் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கவேண்டும். பிரச்சாரத்தின் மூலமாகவா மக்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியும்? மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்று தெரியாதா? என்று யாரும் தப்புக்கணக்கு போட்டுவிடக் கூடாது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT