Skip to main content

எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை இனிதான் ஆரம்பம்! பரப்புரையில் முதல்வர் பஞ்ச்!

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

 

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14, 2019) பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி, பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் பேசினர். முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

 

e


அதிமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். சேலம் மாநகரில் குன்றென உயர்ந்து இருக்கும் பாலங்களே இந்த ஆட்சியின் சாதனைக்கு சாட்சிகளாகும். ஜெயலலிதா இருக்கும்போது, சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்களைக் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதை நாம் செய்து முடித்திருக்கிறோம். இன்னும் சில உயர்மட்டப் பாலங்களின் வேலைகள் நடந்து வருகின்றன.


குடிநீர் பிரச்னையைத் தீர்க்க எடப்பாடி - கொங்கணாபுரம் தனிக்குடிநீர்த்திட்டம், மேச்சேரி - நங்கவள்ளி தனிக்குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது, சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. ஓமலூர் - மேச்சேரி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. விரைவில் சேலத்தில் ராணுவ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் சேலத்தில் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படி இந்த அரசின் சாதனைகள் ஏராளமாக இருக்கின்றன. 


நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் நலன் கருதி ஏரிகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டேன். தடுப்பணைகள் கட்ட 1000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும்போது, கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால், தமிழகம் மிகவும் செழிப்பான மாநிலமாக மாறிவிடும். 


ஆனால், ஸ்டாலின் என்னுடைய அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடும் என்று பேசி வருகிறார். அவருக்கு ஒன்றை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... இந்த தேர்தலுக்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை துவங்க உள்ளது. ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோதும் பலிக்காது. அவர் போட்டுவைத்திருக்கும் திட்டமெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டோம். 


சேலம் மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். இந்த மாவட்டம் முதல்வரைப் பெற்ற மாவட்டம். புதுச்சேரியுடன் நாற்பது மக்களவை தொகுதிகள், 22 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். குறிப்பாக சேலம் தொகுதியில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

 

 
 

சார்ந்த செய்திகள்