ADVERTISEMENT

'சி.ஏ.ஏ சட்டத்திற்கு ஆதரவளிக்க சொன்னதே எடப்பாடிதான்'-போட்டு உடைத்த ஓபிஎஸ் 

10:23 PM Jan 11, 2024 | kalaimohan

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக பிளவுபட்டு கிடக்கும் நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே இருந்த முரண்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,''பழனிசாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன். அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் தெரிவிப்பேன். வரும் லோக்சபா தேர்தலில் இறைவன் தந்த சின்னத்தில் நான் போட்டியிடுவேன். அ.தி.மு.க. சின்னம் தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வரும் 19ம் தேதி பொதுக்குழு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. அதில் கிடைக்கும் தீர்ப்பின் அடிப்படையில் நீதிக்கு தலை வணங்குவோம்'' எனக் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று தேனியில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ''அனைத்து அம்சங்களையும் கேட்டு விசாரணை நடத்தி 19ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக நீதியரசர்கள் தெரிவித்துள்ளார்கள். எங்கள் தரப்பில் அனைத்து அம்சங்களையும் நீதிமன்றத்தில் வாதங்களாக வைப்போம். கட்சியில் பிளவு இருந்தால் வெற்றிபெற முடியாது என்பதால் தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருகிறோம்.

ADVERTISEMENT

ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட தோல்வி. சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடிய அதிமுக எம்பிக்களை அனுப்பி வைத்தது எடப்பாடி பழனிசாமி தான். தற்போது நிலைமைக்கு தகுந்தார் போல மாற்றி மாற்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எங்கள் உடலில் அதிமுக ரத்தம் தான் ஓடுகிறது. அதை எவராலும் மாற்ற முடியாது. கட்சி, கொடியை பயன்படுத்த தடை வாங்கலாம் ஆனால் எங்கள் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்'' என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT