
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீழ்ந்து, அஇஅதிமுக-வின் நல்லாட்சி அமைவது தான் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. சிறுமி முதல் மூதாட்டி வரை, பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதும், அரசுப்பள்ளி முதல் ஓடும் ரயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதும் வேதனைக்குரியது.
#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை, இதுவரை பதில் இல்லை. #யார்_அந்த_SIRகள் என்று கேட்டால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட, குற்றவாளிகளின் பாட்டன் வம்சத்தில் இருப்பவர்கள் யாராவது தொலைதூரத்தில் அஇஅதிமுகவுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று புலனாய்வு மேற்கொள்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு.
இந்த திமுக ஆட்சியாளர்களா பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கண்டிப்பாக வாய்ப்பே இல்லை. எனவே தான், #SaveOurDaughters என்று பெண்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை தொடர்ந்து அதிமுக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீழ்ந்து, அஇஅதிமுக-வின் நல்லாட்சி அமைவது தான்.
இதனை வலியுறுத்தும் வகையில் எனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், என் பெயருடன் "SayYesToWomenSafety&AIADMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளேன். இதுவரை நாம் நடத்தி வந்த #SayNoToDrugs_SayNoToDMK என்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான போராட்டமும் தொடரும்! வெற்றி பெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.