தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அவருடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 4 நாள் சுற்றுப்பயணமாகத் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்திற்கு இன்று (18.07.2025) எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் வழியில் திருவாரூர் மாவட்ட எல்லையான நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி என்ற பகுதியில் விவசாய நிலத்தில் அவர் இறங்கி அங்குள்ள விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். 

அப்பொழுது விவசாயிகளுடன் வயலில் என்ன சாகுபடியில் செய்து வருகிறீர்கள், அவர்களுக்கு என்னென்ன தேவைகள் குறித்தும், அரசின் சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளின் தேவை குறித்தும் கேட்டறிந்தார். மேலும்  அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் மானிய திட்டத்தில் வழங்கப்படும் என்பது எனவும் விவசாயிகளிடம் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து கொல்லுமாங்குடியில் எடப்பாடி பழனிக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி நன்னிலம் மற்றும் திருவாரூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.