Advertisment

“அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்துவோம்” - இ.பி.எஸ் எச்சரிக்கை

Edappadi Palaniswami has warned tn government about the NLC issue

Advertisment

என்.எல்.சி விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக மாபெரும் போராட்டத்தை நடத்தும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி அனல் மின் நிலையமும், அதன் நிலக்கரி சுரங்கமும் நாட்டின் மின்சாரத் தேவைக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனும் முக்கியம். நிறுவனம் துவங்கிய 1956-ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை அதன் வளர்ச்சிக்காக நிலத்தைக் கொடுத்த அப்பகுதி மக்களின் எந்தத் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதது வேதனை அளிக்கிறது.

நாட்டின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், தங்களின் நலன்கள் பாதிக்கப்பட்டாலும், நாட்டு நலன் கருதி நிலம் அளித்த மக்கள் இன்னும் துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். மக்களின் இந்தத் துயரைப் போக்க, மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவ்வப்போது குரல் கொடுக்கப்பட்டது.

Advertisment

காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி புரிந்தபோது என்.எல்.சி நிறுவனம், தனது பங்குகளை தனியாருக்கு விற்க முன்வந்த போது, ஒரு பொதுத் துறை நிறுவனம் தனியார் கைகளுக்குச் செல்வதைத் தடுக்கும் எண்ணத்தில் ஜெயலலிதா அந்தப் பங்குகளை தமிழக அரசின் சார்பில் வாங்கினார்கள். 2000-ம் ஆண்டு முதல் இன்று வரை என்.எல்.சி-யின் விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நிலம் அளித்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்போ முழுமையாக வழங்காத அவலம் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு விரிவாக்கப் பணிகளுக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், மக்களின் குறைகளைப் போக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பி அரசின் கவனத்தை ஈர்த்தும், என்.எல்.சி நிர்வாகத்திடம் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், கேளாக் காதினராக நிர்வாகம் உள்ளது.

இந்நிலையில் நேற்று (9.3.2023), கடலூர் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உட்பட நில உரிமையாளர்களை சிறைவைத்துவிட்டு, டிஐஜி மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், நூற்றுக்கணக்கான காவல் துறையினரின் பாதுகாப்புடன் விளை நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், பாதிக்கப்படும் மக்களின் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன். 10 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது, என்.எ.சி நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த 22 மாதகால திமுகஆட்சியில் என்.எ.சியின் மக்கள் விரோதப் போக்குக்கு உறுதுணையாக இருந்து தாலாட்டு பாடிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடலூர் மாவட்ட திமுக அமைச்சர்கள் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். கடலூர் மாவட்ட மக்களையும், விவசாயிகளின் நலனையும் மதிக்காத இந்த நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

என்.எ.சி நிறுவனத்தின் அடாவடித்தனமான செயல்பாடுகளைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்களின் குரல்வலையை தன்னுடைய ஏவல் துறையான காவல் துறையை விட்டு நசுக்கும் போக்கில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது சர்வாதிகாரத்தின் உச்சமாகும். பிரதமர் மரபு சாரா எரிசக்திகளான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவைகளைப் பெருக்குவோம். இதனால் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டிற்கான நிலக்கரித் தேவை குறையும் என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மூன்றாவதாக அனல் மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எ.சி நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவதுபோல் தங்களது சுய லாபத்திற்காக நடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்.எ.சி விவகாரத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானதாகும். தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை, அடக்குமுறையை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

சமீப காலமாக, வாரந்தோறும் அமைச்சரும், அதிகாரிகளும் விவசாயிகளை அழைத்து மிரட்டுவதை விட்டுவிட்டு, மத்திய அரசோடும், என்.எ.சி நிறுவனத்தோடும், வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களோடும், சட்டப்படி குழு அமைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையைத் தீர்க்கவும், நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும், உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

எல்லா பிரச்சனைகளிலும் மெத்தனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையிலும் இந்த அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

nlc admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe