எடப்பாடி என்ன வெள்ளைக்கார துரையா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

edappadi palanisamy

டெல்டாவில் மக்களை சந்திக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி என்ன வெள்ளைக்கார துரையா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி பாசன மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இரு இடங்களில் மட்டும் நிவாரண உதவி வழங்கி விட்டு திரும்பியிருக்கிறார். கடுமையான சேதமடைந்த பிற பகுதிகளை பார்க்காமல் ஏதோ சுற்றுலாவுக்கு சென்றதைப் போன்று முதலமைச்சர் திரும்பியிருப்பது கண்டிக்கத்தக்கது.

கஜா புயலால் சூறையாடப்பட்ட காவிரி பாசன மாவட்டங்கள் சின்னாப்பின்னமாகியுள்ளன. தஞ்சாவூர், நாகப்பட்டினர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், அவற்றையொட்டிய புதுக்கோட்டை மாவட்டத்திலும் மிகக்கடுமையான பாதிப்புகளும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. கஜா புயல் தாக்கி 5 நாட்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரிவர உணவு வழங்கப்படவில்லை. சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களுக்கு முதல் ஆளாக சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வேண்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஆனால், புயல் தாக்கி 100 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குப்பம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் ஆகிய இடங்களுக்கு சென்ற முதலமைச்சர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மிகக்கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் நின்றவாறு சிலருக்கு மட்டும் நிவாரண உதவிகளை வழங்கி விட்டு திரும்பியுள்ளார்.

முதலமைச்சர் நிவாரண உதவி வழங்கும் படத்தைப் பார்த்தாலே உண்மை விளங்கும். முதலமைச்சருக்கு அருகில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், அடுத்த வளையத்தில் காவல்துறை உயரதிகாரிகள், மூன்றாவது வளையத்தில் காவல்துறையின் தடுப்புத் தட்டிகள், அதற்குபின் ஆயிரக்கணக்கில் காவலர்கள், முதலமைச்சரிடம் நிவாரண உதவி வாங்குவதற்காக அழைத்து வரப்பட்ட சில மக்கள் தவிர கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மக்களையே பார்க்க முடியவில்லை. முதலமைச்சர் வந்திருப்பதை அறிந்து அவரிடம் மனு கொடுப்பதற்காக வந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தமது பயணத்தில் மக்களை சந்திக்காமல் அதிகாரிகளையும், அதிமுகவினரையும் மட்டுமே சந்தித்து திரும்பியுள்ளார் முதலமைச்சர்.

anbumani ramadoss

அதன்பின் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை பார்க்காமல், மழையை காரணம் காட்டி திருச்சி திரும்பிய முதலமைச்சர் அங்கு ஓய்வெடுத்து மகிழ்ந்துள்ளார். மழை குறைந்தபின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க முயலாமல் சென்னைக்கு திரும்பியுள்ளார். பாதிக்கப்ப்பட்ட மக்களை சந்தித்து மனுக்களைப் பெறவும், மிக மோசமான பாதிப்புகளை சந்தித்த பகுதிகளுக்கு செல்ல முதலமைச்சர் மறுத்திருப்பதும் அவரது ஆணவத்தையும், அதிகாரச் செருக்கையும் தான் காட்டுகின்றன. முதலமைச்சர் நினைத்திருந்தால் உலங்கு ஊர்தி செல்ல முடியாத இடங்களுக்குக் கூட மகிழுந்தில் சென்று பார்த்திருக்க முடியும். பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு ஹெலிகாப்டரில் திரும்புவதற்குள் மகிழுந்தில் மன்னார்குடிக்கும், வேதாரண்யத்திற்கும் சென்றிருக்க முடியும். ஆனால், அப்படிச் செல்வதற்கு,‘மருமகனே வருக’ என்று பதாகை அமைத்து அழைத்து பிரியாணி விருந்து படைக்கும் மாமியார் ஊர் இல்லையே? அதனால் தான் அவர் அங்கு செல்லாமல் புறக்கணித்திருக்கிறார்.

அதிகாரிகளும், காவலர்களும் புடைசூழ ஆடம்பர மகிழுந்தில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட முதலமைச்சருக்கு சிரமமாக இருந்தால், கொட்டும் மழையில் குடியிருக்க வீடும், உணவும் இல்லாமல், சொந்த ஊர்களிலேயே அகதிகளைப் போலத் தவிக்கும் மக்களின் துயரம் எத்தகையதாக இருக்கும்? ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்ட மக்களும் பேரிடரின் கொடுமைகளை அனுபவித்து வரும் நிலையில், மழையில் நனைய மாட்டேன், தரையில் கால் வைக்க மாட்டேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி எங்களின் பிரதிநிதியா.... அல்லது ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுக்கு கங்காணி வேலைப் பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட வெள்ளைக்காரத் துரையா? என்று பாதிக்கப்பட்ட மக்கள் வினவுகின்றனர். இந்த வினாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தே தீர வேண்டும்.

கன்னியாக்குமரியில் ஒக்கி புயல் தாக்கிய போது அங்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்கள் அனைவரையும் கம்பித் தடுப்புகளுக்குள் சிறை வைத்து விட்டு 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தான் ஒலிப்பெருக்கி மூலம் குறைகளை கேட்டார். இப்போது மக்களையே சந்திக்காமல் அவர் திரும்பியுள்ளார். இதற்காக அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார்.

anbumani ramadoss Edappadi Palanisamy gaja storm
இதையும் படியுங்கள்
Subscribe