Edappadi Palaniswami consultation with supporters!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisment

கடந்த ஜூலை மாதம் 11- ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஆகஸ்ட் 11- ஆம் தேதி அன்று தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (17/08/2022) காலை 10.30 மணிக்கு வழங்கினார். அதில், ஜூலை 11- ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஜூன் 23- ல் நடந்த பொதுக்குழுவுக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை (17/08/2022) மாலை 05.30 மணி முதல் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, பெஞ்சமின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளனர். இதில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது உள்ளிட்டவைக் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றனர்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.