Edappadi Palaniswami congratulates writer S. Ramakrishnan

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்பு ‘பாரதிய பாஷா பரிஷத்’ ஆகும். இந்த அமைப்பு இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த அமைப்பு ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ‘பாரதிய பாஷா’ என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த விருது இந்தியாவின் இலக்கிய விருதுகளில் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது.

Advertisment

இந்த விருது கடந்த 1975ஆம் ஆண்டு சீதாராம் சேக்சாரியா மற்றும் பாகீரத் எச் கனோடியா ஆகியோரால் நிறுவப்பட்டது. மேலும் இந்த விருது ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு பத்திரங்களை உள்ளடக்கியது ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘பாரதிய பாஷா’ விருதை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வரும் மே மாதம் 1ஆம் தேதி ( 01.05.2025) அன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது எனப் பாரதிய பாஷா பரிஷித் அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணர் ஆகும். இவர் கடந்த 30 ஆண்டுகாலமாகச் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம் மற்றும் இணையம் என பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதையும் இவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “பாரதிய பாஷா" இலக்கிய விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். ஆழமிகு சிந்தனைகளோடு வாழ்வியலைப் பிரதிபலிக்கும் நற்றமிழ்ப் படைப்புகளால் தமிழ் இலக்கிய உலகின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழும் "எஸ்.ரா" அவர்களின் மணிமகுடத்தில் மற்றுமொரு நன்முத்தாக இவ்விருது திகழட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment