/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_236.jpg)
சென்னையில் மலை நீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட குழியில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “சென்னை, அசோக் நகரில் சாலையோரம் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், முறையாக தடுப்புகள் வைக்கப்படாத நிலையில் இருந்த, மழைநீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார், அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என அவல நிலையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே இத்துயரச் சம்பவத்திற்கு காரணம்.
இம்மரணத்திற்குத் தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத, குடும்ப நலனையே பிரதானமாகக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)