Advertisment

“பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள்” - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Edappadi Palaniswami condemns the ongoing crimes against women

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் - வேடிக்கை பார்க்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கடும் கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 44 மாதகால திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழகம் குற்ற பூமியாக மாறிவிட்டது என்பது நாள்தோறும் நடைபெற்று வரும் சம்பவங்களில் இருந்து உறுதியாவது வேதனை அளிக்கிறது. போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் முதல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் காமக்கொடூர குற்றவாளிகள் வரை, பலர் ஆளும் திமுக-வைச் சார்ந்தவர்களாக இருப்பதும்; அவர்களைக் காப்பாற்ற இந்த ஆட்சியாளர்கள் முயல்வதும் கொடுமையானது.

Advertisment

'நாம் எது செய்தாலும் நம்மைக் காப்பாற்ற ஆட்சியாளர்கள் உள்ளனர்’ என்ற திமிரில் ஆளும் கட்சியினரும்; 'எந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், ஆளும் கட்சியினரின் துணையோடு தப்பிவிடலாம்' என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்பட்டுள்ளதாலும், தமிழ் நாட்டில் குற்றச் செயல்கள் நாள்தோறும் பெருகி வருவது, அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது.

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கைது செய்யப்பட்டவர், திமுக-வைச் சேர்ந்த நிர்வாகி என்று செய்திகள் வந்த நிலையில், அவருடன் பேசிய 'யார் அந்த சார்?' என்பதை இதுவரை இந்த ஆட்சியாளர்கள் கண்டுபிடிக்காததை ஊடங்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பிய சூழ்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திவரும் சூழ்நிலையில், 'உண்மைக் குற்றவாளியை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு உறுதி அளிக்காமல்’, எங்களுக்கு பதில் அளிப்பதையே கடமையாகக் கொண்டுள்ளனர் சில திமுக அமைச்சர்கள்.

குறிப்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த சமூகநலத் துறை அமைச்சர் அளித்த பேட்டியை வெளியிட்ட நாளிதழின் அதே பக்கத்தில் தூத்துக்குடியில், பூங்காவில் நடைபயிற்சி சென்ற இளம் பெண்ணுக்கு ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்தி வந்துள்ளது. இதிலிருந்து, திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் இலட்சணத்தை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவியின் பாலியல் வன்கொடுமை கொடூரத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே, ராமநாதபுரத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன.

29.12.2024 அன்று இரவு, அந்தப் பெண் சாலையோரம் கருவேலங்காட்டுக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காகச் சென்றபோது, நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக, காட்சி ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வந்துள்ளன. மேலும் இன்று, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளதாக வந்த செய்திகளில் ஒருசில:-

சென்னை, வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக (2.1.2025) ஊடகச் செய்தியும்; ஒசூரில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகள், அனைவரையும் மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

தி.மு.க-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சி இருக்கும் வரை யாருக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இருக்காது என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்துவிட்டார்கள். எனவே, பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள, வெளியில் செல்லும்போது தற்காப்புக்கான Spray, Emergency SOS Alarm உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் இப்படியொரு நிலை வந்ததற்கு, உங்களைப் போன்றே நானும் வருந்துகிறேன்.

பெண்களுக்கு எதிராக இத்தனை கொடூரங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடைபெறுவதாக, தினமும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வரும்போது, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மவுன சாமியாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

'பெண்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு பேட்டியளிக்கும் மந்திரிகள், தமிழகத்தில் தினமும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் எங்களுக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் காமுகர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Women pmk Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe