Edappadi Palaniswami condemned  DMK government on the child issue

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த குழந்தையின் வலது கை அழுகியதால், அந்தக் கை அகற்றப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாகத் தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே பெற்றோரின் குற்றச்சாட்டின் காரணமாகக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி சுகாதாரத்துறைஅமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில் குழந்தைக்குத் தவறான சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வைத்து குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், குழந்தையின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால் நேற்று காலை உயிரிழந்தது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய், மருத்துவரின் அலட்சியத்தால்தான் குழந்தையின் கை அகற்றப்பட்டது. அதனால்தான் தற்போது குழந்தையும் இறந்துள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த திமுக அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை, தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.அன்புக் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத்துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்

மேலும் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பினையும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அலட்சியம் அக்கறையின்மைக்கு உதாரணமாக இருக்கும் இந்த திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதையும், மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதையும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிரூபணம் செய்கிறது”எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment