
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், மதுரை மத்திய சிறையில் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட ‘தமிழக முதலமைச்சரின் சிறை நற்பணிப் பதக்கம் - பொங்கல் பதக்கம் 2021-ஐ 12 பேருக்கு இன்று (11-ஆம் தேதி) வழங்கியிருக்கின்றனர்.
தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார் சிங், 2 மாதங்களுக்கு முன்பே மேற்கண்ட பதக்கங்களை வழங்க உத்தரவிட்ட நிலையில், இத்தனை தாமதமாகத் தந்துள்ளனர். இந்த நிகழ்வை தனது முகநூலில் பதிவு செய்த மதுரை மத்திய சிறை முதல்நிலைக் காவலர் பொ.ராமராஜ், தனக்குக் கிடைத்த சான்றிதழையும் படத்துடன் வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக சிறைத்துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி. முருகேசன் குறித்து சிறைத்துறை வட்டாரத்தில் முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது. “சேலத்துக்காரரான முருகேசன் எடப்பாடி விசுவாசத்தை இன்றுவரையிலும் தொடர்கிறார். முருகேசனும் சரி, மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனியும் சரி, நான்கைந்து ஆண்டுகளாகியும் இடமாற்றம் செய்யப்படவில்லை. திமுக ஆட்சியிலும் ‘பவர்ஃபுல்’ ஆக இவர்களது ராஜ்ஜியமே தொடர்கிறது” என்கிறார்கள்.
இத்தனை காலம் கடந்து சிறை நற்பணி பதக்கங்களை வழங்கி, சிரமப்பட்டு தூக்கத்தைக் கலைத்திருக்கிறது தமிழக சிறைத்துறை!