Advertisment

"காவல்துறை செய்ய வேண்டியதை ஜெயக்குமார் செய்தார்; அதற்கு பரிசு சிறைத்தண்டனையா?" - எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

edappadi palanisamy speech at admk protest

Advertisment

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு செய்தது என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெறுகிறது. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "சென்னை 49ஆவது வார்டில் திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்ற ஒருவர் கள்ளஓட்டு போட முயற்சித்திருக்கிறார். அந்த செய்தி ஜெயகுமாருக்குகிடைத்ததும் தொண்டர்களுடன் சென்று அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார். காவல்துறை ஆற்ற வேண்டிய கடமையை ஜெயக்குமார் ஆற்றியிருக்கிறார். கள்ள ஓட்டு போடுவது கடுமையான குற்றம். அப்படி குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவரை கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்தவருக்கு பரிசு, சிறைத்தண்டனை. குற்றம் செய்ய முயற்சித்தவர் மருத்துவமனையில் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். குற்றவாளியை பிடித்து முறைப்படி காவல்துறையிடம் ஒப்படைத்தவர் சிறையில் இருக்கிறார். கள்ள ஓட்டுப் போட முயன்றவரை பிடித்துக்கொடுத்தது குற்றமா? அவர் மீது வழக்குப் போடுவது நியாயமா?

Advertisment

நகர்ப்புற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குண்டர்களை இறக்கி, கள்ள ஓட்டுப் போடச் செய்து வெற்றிபெற்ற கட்சிதான் திமுக என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்த நரேஷ்குமார் மீது 12 வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட ரௌடியை முதலமைச்சர் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவில் ரௌடிக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான். கள்ள ஓட்டு போட்டு திமுக வெற்றி பெற்றிருக்கிறதே ஒழிய ஜனநாயக முறையில் வெற்றிபெறவில்லை. தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் கைப்பாவையாகவும் திமுகவின் கைப்பாவையாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்துதான் திமுக வெற்றிபெற்றுள்ளது. நாங்கள் இரட்டை இலைக்குத்தானே ஓட்டு போட்டோம். எப்படி நீங்கள் தோற்றீர்கள் என்று பொதுமக்கள் பலர் எங்களிடம் கேட்கிறார்கள். நகர்ப்புற வார்டில் போட்டியிட்ட பல வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டும், சில வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. அப்படியென்றால் நடைபெற்ற தேர்தல் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்" எனப் பேசினார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe