Advertisment

விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடு; முதல்வர் வாக்குறுதி!

Edappadi Palanisamy says that Concrete house for agricultural laborers

நிலம், வீடு இல்லாத விவசாய கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை 100 வறண்ட ஏரிகளில் கொண்டு சென்று நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (பிப். 26) தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:மேட்டூர் அணையில் இருந்து வெள்ள உபரி நீரை திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் நீரேற்று செய்து, அதன்மூலம் வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலம் 42 ஏரிகளுக்கும், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து நங்கவள்ளி வழியாக 31 ஏரிகளுக்கு நீர் வழங்கப்படும்.

Advertisment

இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களைச் சேர்ந்த 8 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 40 கிராமங்களில் உள்ள 79 ஏரிகள் மூலம் 4238 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும். ஏறக்குறைய 38 கிராமங்களுக்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.இத்திட்டத்தின் மூலம் பயனபெறும் ஏரிகளுக்கு தேவைப்படும் மொத்த நீர் அரை டிஎம்சி. வெள்ள உபரி நீர் திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து 30 நாள்களுக்கு தினமும் வினாடிக்கு 214 கன அடி வீதம் நீரேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

இத்திட்டப்பணிகள் கடந்த ஆண்டு மே 6ம் தேதி தொடங்கப்பட்டு, முழுவீச்சில் செயல்பட்டு விவசாய மக்களின் நலன் கருதி மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் பணி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 16,43,000 விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியிருந்த 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருக்கிறோம்.

ஐந்து ஆண்டு காலத்தில் இரண்டு முறை பயிர்க்கடனை ரத்து செய்திருக்கிறோம். தேர்தல் நேரத்தில் வருகின்ற கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் கட்சியினர் குறிப்பிடுவர். ஆனால் அதிமுக அரசு, விவசாயிகள் கோரிக்கை வைத்தவுடன் தேர்தலுக்கு முன்பே அதனை நிறைவேற்றி வருகிறோம்.விவசாயிகளின் கோரிக்கையான மும்முனை மின்சாரம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் வழங்கப்படும். இப்படி விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி இருக்கிறது.

கடைமடை பகுதிகளிலும் தூர்வாரி மேட்டூரில் இருந்து தண்ணீர் கடைமடை வரை சரியாகச் சென்று சேர்ந்த காரணத்தால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள், விதைகள், உரங்கள் அனைத்தும் குறித்து காலத்தில் அரசாங்கம் வழங்கிய காரணத்தாலும் கடந்த ஆண்டு 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல், அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இவ்வளவு நெல் உற்பத்தி செய்தது கிடையாது. இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் 27 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் உற்பத்தி செய்தது இல்லை.

தமிழ்நாட்டில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க, 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தை நிறைவேற்ற திட்ட அறிக்கை 10,711 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அத்திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் சுத்தமான நீர் கிடைக்கும்.

இத்திட்டத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் காக்கும் அரசாக திகழ்கிறோம். நிலம், வீடு இல்லாமல் இருக்கும் விவசாய கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Salem Edappadi Palanisamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe