Skip to main content

இதெல்லாம் தேர்தல் கருத்துக்கணிப்பா? எடப்பாடி விளாசல்!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

ஊடகங்களில் வெளியானது தேர்தல் கருத்துக்கணிப்பு அல்ல; அது கருத்துத்திணிப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் கூறினார்.
 

edapadi

 

 

தமிழகத்தில் நடந்த நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு எடுப்பதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு, விமானம் மூலம் திங்கள்கிழமை (மே 20, 2019) காலையில், வந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களின் வினாக்களுக்கு பதில் அளித்தார். அவர் கூறியது: 


கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, சேலம் மாவட்டத்தில் 3 தொகுதிளில்தான் அதிமுக ஜெயிக்கும் என்றும், நானும் தோல்வி அடைவேன் என்றும் ஊடகங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டன. ஆனால், அந்த தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் நாங்கள் பத்து இடங்களில் வெற்றி பெற்றோம். நானும் 42000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதுதான் கருத்துக்கணிப்புகளின் நிலவரம். இதெல்லாம் கருத்துக்கணிப்பு அல்ல. கருத்துத் திணிப்பு.


மற்ற மாநிலங்களின் தேர்தல் நிலவரம் பற்றி எனக்குத் தெரியாது. நாங்கள் மாநிலக்கட்சிதான். தேசியக்கட்சி அல்ல. மக்களை தேர்தலைப் பொருத்தவரை தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்பட 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இடைத்தேர்தல் நடந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றி பெறும். நாங்கள் சொன்னது சரியா? அல்லது ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் சரியா? என்பது வரும் 23ம் தேதி தெரிந்து விடும்.

 


அதிமுகவைப் பொருத்தவரை, என்றைக்கும் ஒரே நிலைப்பாடுதான். திமுகவினர் அடிக்கடி நிறம் மாறக்கூடியவர்கள். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவரட்டும். அதன்பிறகு மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து சிந்திக்கலாம். 


ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை ஆக வேண்டும் என்பதற்குதான் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இனி அவர்தான் முடிவு செய்வார். எழுவர் விடுதலை தொடர்பாக திமுக ஆட்சிக்காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை உங்கள் (ஊடகங்கள்) வாயிலாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கருணாநிதி முதல்வராக இருந்தபோது நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என்றும், மற்றவர்களுக்கு தண்டனை தொடரலாம் என்றும் அமைச்சரவை கூடி தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அதிமுக அமைச்சரவை, மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் கொண்டு வந்தது.  


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

'ஓபிஎஸ் ஒரு வெத்துவேட்டு'-சி.வி.சண்முகம் சாடல்  

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
'OPS Or Vethuvettu' - CV Shanmugam Chatal

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகளை அதிமுக முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ''முதன் முதலாக ஒரு மத்திய கேபினட் அமைச்சரை பெற்றுத்தந்தது அதிமுக. பாண்டிச்சேரி நாடாளுமன்ற உறுப்பினரை அன்றைக்கு மத்தியில் கேபினட் அமைச்சராக முதன் முதலில் ஒரு மாநில கட்சி  பெற்றுக் கொடுத்தது. அது இந்த பாண்டிச்சேரிக்கான பெருமை. அதிமுகவிற்கு அந்த உரிமையை பெற்றுக் கொடுத்த வீரமும் திறமையும் இருக்கிறது. இங்கு இருக்கின்ற காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பாண்டிச்சேரி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். எங்கள் தலைமையில் சிறப்பான வெற்றி கூட்டணி அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். அது விரைவில் அறிவிக்கப்படும். தொகுதி பங்கீடு பற்றியோ, கூட்டணி பற்றியோ எங்களுடைய கழகப் பொதுச் செயலாளர் விரைவில் அறிவிப்பார். ஓபிஎஸ் என்பவர் ஒரு வெத்துவேட்டு. அவருடைய சகாப்தம் முடிந்து விட்டது. இன்றைக்கு அவர் பெருங்காய டப்பா சத்தம் போடுவது போல் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லை'' என்றார்.