Skip to main content

எட்டுவழிச்சாலை உறுதியாக கொண்டு வரப்படும்! எடப்பாடி மீண்டும் அதிரடி!!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

 


விவசாயிகளிடம் சம்மதத்துடன் சேலம் - சென்னை இடையிலான எட்டுவழிச்சாலைத் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிரடியாக கூறியுள்ளார். இது, விவசாயிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

b


கடந்த 2011&2016 அதிமுக ஆட்சியின்போது, சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிதாக ஈரடுக்கு மேம்பாலங்கள் கட்டப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2016 பிப்ரவரி மாதம், 441 கோடி ரூபாயில் மேம்பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.


பின்னர் 2016ல் மீண்டும் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பாலம் கட்டுமானப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது. சேலம் ஏவிஆர் ரவுண்டாவில் தொடங்கி ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை ஒரு பாலமும், குரங்குச்சாவடியில் இருந்து அண்ணா பூங்கா வரை மற்றொரு மேம்பாலமும் ஈரடுக்காக கட்டப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், ஏவிஆர் ரவுண்டானா & ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையிலான பாலத்தின் ஒரு பகுதி முடிவுற்றதை அடுத்து, அந்தப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக இன்று (ஜூன் 7, 2019) திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய பாலத்தைத் திறந்து வைத்தார். 


இவ்விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியது:


சேலம் நாளுக்குநாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளித்து, அடிக்கல் நாட்டினார். அந்த வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலம், தற்போது திறக்கப்பட்டு உள்ளது. 

 

e


அதேபோல் சேலம் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடக்கும் அரியானூர், மகுடஞ்சாவடி பகுதிகளில் மட்டுமின்றி, அனைத்து ரயில்வே கிராஸிங் பகுதிகளிலும் மேம்பாலங்கள் கட்டப்படும். சேலத்தில் பஸ் போர்ட் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சேலம் & செங்கப்பள்ளி சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 


கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் சேலம் வழியாக செல்கின்றன. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாலைகளே இங்கு உள்ளது. வாகனங்களின் பெருக்கமும் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் சாலை வசதி மிகவும் அவசியமாக உள்ளது. 


இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே, சேலம் - சென்னை இடையே உலகத்தரம் வாய்ந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுப்பது மட்டுமே மாநில அரசின் வேலையாகும். 


தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்தத் திட்டத்திற்காக மக்களை கட்டாயப்படுத்தி நிலத்தை பறிக்க அரசு முயற்சிக்காது. பாதிக்கப்படும் மக்களை அழைத்து சமாதானமாகப் பேசி, அவர்கள் சம்மதத்துடன் நிலத்தைப் பெற்று, எட்டுவழிச்சாலை திட்டத்தை உறுதியாக கொண்டு வருவோம். 


இந்த சாலையால் நமது பகுதியில் தொழில் வளம் பெருகும். இது தனிப்பட்ட பழனிசாமிக்காக போடப்படும் சாலை அல்ல. உயிர் பாதுகாப்பு, எரிபொருள் மிச்சம், சுற்றுச்சூழல் மேன்மை, பயண நேரம் மிச்சம் போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த சாலையால் கிடைக்கும். மொத்தத்தில் சாலை வசதிகளில் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


எட்டு வழிச்சாலைத் திட்டம் அமைய உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளும் இத்திட்டத்தை எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தொடர்ந்து எதிர்ப்பைக் காட்டி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று பேசியிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்