edappadi palanisami insists flood relief fund of Rs. 12 thousand should also be provided

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகைநியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிவாரண தொகையாக அரசு வழங்கவுள்ள ரூ. 6 ஆயிரத்தை உயர்த்தி ரூ. 12 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, மிக்ஜாம் புயல் மழையால், சென்னை மாநகரம், புறநகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000/- ரூபாயை உயர்த்தி 12,000/- ரூபாயாக வழங்குவதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, மேற்கண்ட நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிட இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.