ADVERTISEMENT

பிரதமரை நான் தனியாக சந்திப்பது சரியாக இருக்காது: எடப்பாடி பழனிசாமி 

03:44 AM May 03, 2018 | rajavel

புதுடெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த குழுவின் முதல் கூட்டம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

இந்த கூட்டம் முடிந்தபின் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். அங்கு நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது அவர் கூறியதாவது:-

நான் பங்கேற்றது, மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம். அது தொடர்பான கருத்துகளையே கூட்டத்தில் கேட்டனர். ஆனால் தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்கனவே பிரதமர் அனுப்பச் சொன்னார். அதை அனுப்பி இருக்கிறோம்.

மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல் அமைச்சர்களை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வரவேற்றனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள், அனைத்து விவசாய சங்க தலைவர்களை அழைத்து தீர்மானம் நிறைவேற்றி பிரதமரிடம் அளித்தோம். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுக்கொண்டோம். ஆனால் பிரதமரை சந்திப் பது தொடர்பாக கடிதம் வரவில்லை.

பின்னர் ஒரு வாரம் கழித்து வந்த கடிதத்தில் நீர்வளத்துறை மந்திரியை முதலில் சந்தித்து பேசுங்கள் என்று குறிப்பிட்டனர். உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து கேட்டோம். அவர், ‘மத்திய அரசு தட்டிக்கழிக்கப்பார்க்கிறது. நாம் மத்திய மந்திரியை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் எப்போது அழைக்கிறாரோ அப்போது அவரை சந்திப்போம்’ என கூறினார். எனவே காவிரி தொடர்பாக பிரதமரை நான் தனியாக சந்திப்பது சரியாக இருக்காது.

அது மட்டுமல்ல, ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு பிரதமர் வந்தபோதும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைக்க வேண்டும் என்று விழா மேடையிலேயே வலியுறுத்தினேன்.

அதன்பிறகு ராணுவ கண்காட்சிக்கு வருகை தந்தபோதும் நானும், துணை முதல்- அமைச்சரும் அவரிடம் காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினோம். அனைத்துக்கட்சிக்குழு எழுதிய கடிதத்தையும் வழங்கினோம். ஆகவே, தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தருவதில் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT