Skip to main content

எனது ஊரின் பெயரில் தனி மாவட்டமா..? -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்!

 

 erode

 

பல்வேறு திட்டப் பனிகள் தொடக்க விழா, நல திட்ட உதவிகள் வழங்குதல் என அரசு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை ஈரோட்டுக்கு வருகை தந்தார்.

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோலியக் குழாய் அமைக்கும் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. விவசாயிகளின் அனுமதியுடன்தான் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த காலங்களில் நிலம் எடுப்புக்கு நிலத்தின் மதிப்பில் 10 சதவீதம் தான் வழங்கப்பட்டது. இப்போது 100 சதவீத இழப்பீடு வழங்கப்படுகிறது.

 

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கையெடுக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கையெடுக்கப்படும்.    

 

மின் கட்டணத்தில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 21 ஆம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்.  மின் கட்டண கணக்கீட்டில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை. கரோனா காரணமாக மின் கட்டணத்தை வீடு வீடாகச் சென்று கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டது. 4 மாதங்களுக்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, இரண்டாகப் பிரித்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு மேல் என்ன சந்தேகம் என்பது தெரியவில்லை. வேண்டுமென்றே ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக, இதைச்சொல்லி போராட்டம் நடத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

 

சாயக்கழிவு பிரச்சனை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதில் உண்மை இல்லை. இது தவறான தகவல். 147 சாய ஆலைகள் உள்ளன. இதில் 41 சாய ஆலைகள் தனித்தனியே தங்கள் வளாகத்தில், பூஜ்ய கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி செயல்படுத்தி வருகின்றன. அரசு கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரித்துதான் விட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை அரசு கண்காணித்து வருகிறது. எங்காவது தவறு நடப்பதாக அரசு கவனத்துக்கொண்டு வந்தால் நடவடிக்கையெடுக்கப்படும்.    

 

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் உயிரிழந்தால் அரசு ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும் என அரசின் அறிவிப்பு குறித்த விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவத் துறையில் பணியாற்றி வருபவர்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தால் ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும் என்றும், பிற துறைகளைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தால் ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் எனவும், அவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் பட்டியலை மொத்தமாக தயாரித்து அரசு வெளியிடும். அதன்பிறகு நிவாரணம், வாரிசுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

 

மஞ்சள் விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து செயல்படுத்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.30 கோடி செலவில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.    


            
உலக அளவில் 210 நாடுகளில் கரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக கரோனா பரிசோதனை செய்த ஒரே மாநிலம் தமிழகம் தான். நோய்ப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் நோய்ப் பரவலைக் குறைத்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரலாம்.


தொழிற்சாலைகளில் 100 சதவீதம் அளவுக்கு பணியாளர்களை வேலைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு  கடன் வசதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதன்படி ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி கடன் அளிக்க அரசு நடவடிக்கையெடுத்துள்ளது.

 

http://onelink.to/nknapp

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, அந்தியூர் வட்டங்களைப் பிரித்து எடப்பாடி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி, இது தவறான தகவல், இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படமாட்டாது என்றார்.  

 

ஞாயிற்றுக்கிழமை போல் பொது முடக்கம் நீடிக்கப்படுமா? என்ற கேள்விக்கு தற்போது வரை அதுபோன்று எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என்றார்.

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்