edappadi k palaniswami condoles the surviving child

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர். 32 வயதான இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஜிஷா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், ஒன்றரை கிலோ எடையில் குறை பிரசவத்தில் பிறந்த இந்த குழந்தைக்கு, தலையில் ரத்த கசிவு மற்றும் நீர் கசிவு உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கிடையில், அந்த குழந்தைக்கு தலையில் நீர் கட்டியிருந்ததால், கடந்தாண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

இந்நிலையில், தஸ்தகீர் - அஜிஷா தம்பதியினர் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள். இத்தகைய சூழலில், அந்த குழந்தைக்கு தலையில் ஒரு டியூப் பொருத்தப்பட்டிருந்தது. அந்த டியூப் கடந்த 25 ஆம் தேதியன்று குழந்தை இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனது குழந்தையை மீண்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள், அன்றைய தினமே குழந்தைக்கு ஆபரேஷன் செய்தனர். இதையடுத்து, அந்த குழந்தைக்கு இடது கை மற்றும் வலது காலில் டிரிப்ஸ் போடப்பட்டு, அதன் மூலமாகவே மருந்து செலுத்தப்பட்டு வந்துள்ளது.

Advertisment

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதியன்று குழந்தைக்கு வலது கையில் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென குழந்தையின் விரல்கள் நிறம் மாற தொடங்கியது. ஒருகணம், இதை அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் அஜிஷா, இதுகுறித்து செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதை பெரிதாக கண்டுகொள்ளாத செவிலியர்கள், மருந்து செலுத்துவதால் ஏற்பட்ட நிற மாற்றம் என கூறியுள்ளனர்.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே குழந்தையின் கை முழுவதும் நிறம் மாற தொடங்கியது.ஒருகட்டத்தில், பதற்றமடைந்த அஜிஷா, தனது குழந்தையை நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்தவர்கள், குழந்தையின் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையில் குழந்தையின் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்டது.

Advertisment

இதனால் கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர், தங்களுடைய குழந்தையின் கை அழுகியதற்கு செவிலியர்களின் கவனக்குறைவே காரணம் என குற்றம்சாட்டினர். மேலும், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, தமிழக சுகாதாரத்துறை 3 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.

இத்தகைய சூழலில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவம் குறித்து பேசியிருந்தார். அதில், உயிரோடு இருக்கும் குழந்தையை இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், சில தவறான தகவல்களை தெரிவித்திருந்தார். அப்போது, அருகில் இருந்த செம்மலை, குழந்தையின் கை மட்டும்தான் அகற்றப்பட்டுள்ளது என எடப்பாடியிடம் நாசுக்காக தெரிவித்தார். உடனே சுதாரித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, "சாரிங்க தெரியாம சொல்லிட்டேன். இது ரொம்ப தவறான செய்தி. அந்த குழந்தைக்கு செயற்கை கை பொறுத்த வேண்டும்" என மழுப்பிக்கொண்டே பேசி முடித்தார். தற்போது, குழந்தை குறித்து தவறாக பேசிய எடப்பாடியின்வீடியோ காட்சிகள், பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.