Skip to main content

விருது விமர்சனம்; ஸ்டாலினுக்கு குட்டிக்கதை சொல்லிய எடப்பாடி!

பல்வேறு துறைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்துள்ளதாக பாராட்டி, மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, இது தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தார். இந்நிலையில், தலைவாசலில் நடந்த அரசு விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு குட்டிக்கதை சொல்லி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

 

Edappadi K Palaniswami about stalin

 சேலம் மாவட்டம் தலைவாசலில் 1100 ஏக்கர் பரப்பளவில் 1023 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன கால்நடைப்பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா தலைவாசலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய அவர், "தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் மத்திய அரசு மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்று வருகிறது. இதைக்கண்டு பொறாமையில் இருக்கும் எதிர்க்கட்சியினர், விருது வழங்குவோரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். 

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசுக்கு விருது கொடுத்தவர் யார்? அவரைக் கூப்பிட்டு வாருங்கள். நான் அடிக்க வேண்டும் என்று பொதுவெளியில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டுக்குக் தேசிய விருது கிடைத்திருப்பது என்பது தனிப்பட்ட அரசுக்கு மட்டுமின்றி, நம் அனைவருக்கும் கிடைத்த பெருமை. ஆனால் ஒருவருக்கு மட்டும் அதைக்கண்டு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். இந்த விருது பெற கடுமையாக உழைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

 இதைக்கூறும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. 

ஒரு ஊரில் முதியவர் ஒருவர், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவர் கண் முன்னே ஒரு தேவதை தோன்றி, மந்திரக் கண்ணாடி ஒன்றை பரிசாக அளித்தது. இந்த மந்திரக் கண்ணாடியிடம் ஒருவர் மூன்று விருப்பங்களைச் சொன்னால் அது நிறைவேறும் என்று கூறிச்சென்றார்.

அதை பரிசோதிக்க ஆசைப்பட்ட அந்த முதியவர், தன்னுடைய குடிசை வீட்டை மாடி வீடாக மாற வேண்டும் என்று கேட்டார். உடனே அந்த குடிசை வீடு, மாடி வீடாக மாறியது. அடுத்து, நல்ல மழை பெய்து, தனது ஊரில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப வேண்டும் எனக்கேட்டார். மறு நிமிடமே நல்ல மழை பெய்து அன்றே ஊரில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பின. சற்று யோசித்த அந்த முதியவர், தான் வாழும் இந்த ஊர், சகல வசதியுடன் சொர்க்க பூமியாக மாற வேண்டும் எனக்கேட்டார். வெளியில் வந்து பார்த்தால் ஊரே சொர்க்கம்போல் மாறியிருந்தது. 

மறுநாள் காலையில், எதிர் வீட்டில் குடியிருந்த நபர், இரவு முழுவதும் திடீர் மழை பெய்தது. இவருடைய குடிசை வீடு ஒரே நாளில் எப்படி மாடி வீடாக மாறியது? ஊரே மாறி விட்டதே என்று ஆச்சர்யப்பட்டு, அந்த முதியவரிடம் என்ன நடந்தது எனக்கேட்டார். முதியவரும் நடந்ததை நடந்தபடியே கூறினார். பேராசையும், பொறாமையும் கொண்ட அந்த எதிர்வீட்டுக்காரர், ஒரே ஒரு நாள் அந்த மந்திரக்கண்ணாடியை தருமாறு கேட்டார். அந்த முதியவரும் பெரிய மனதுடன் அந்தக் கண்ணாடியை கொடுத்தார்.

அதை எடுத்துச்சென்ற எதிர் வீட்டுக்காரரின் மூக்கு சப்பையாக இருந்ததால், எனது இந்த சப்பை மூக்குக்குப் பதிலாக பெரிய மூக்கு வேண்டும் என்று மந்திரக்கண்ணாடியிடம் கேட்டார். உடனே அவருடைய மூக்கு 3 அடி நீளத்திற்குப் பெரிதானது. உடனே அந்த மந்திரக் கண்ணாடியிடம், எனக்கு இந்த மூக்கு வேண்டாம் என்றார். உடனே அந்த மூக்கு முற்றிலும் மறைந்து போனது. 

 இதைக்கண்டு பயந்துபோன அந்த நபர், எனக்கு பழைய மூக்கே பரவாயில்லை என்று தனது மூன்றாவது கோரிக்கையாக கேட்டதும், மீண்டும் அவருக்கு பழைய மூக்கே வந்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் எது கேட்டாலும் நடக்கவில்லை. ஏனென்றால், மூன்று விருப்பங்களும் தன்னுடைய சுய விருப்பத்திற்கே கேட்டுவிட்டார். அதனால் எந்தப் பலனும் இல்லை. அதனால் பேராசை பிடித்த நபர்களுக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், அது பயன்படப் போவதில்லை.

இந்தக் கதையில் வரும் முதியவர், முதலில் தனக்காக ஒரு வரம் கேட்டு மாடி வீடு பெற்றார். அந்த மந்திரக்கண்ணாடி நன்றாக வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, மற்ற இரண்டு கோரிக்கைகளையும் பொது நலனுக்காக செய்தார். ஆனால் அந்த எதிர்வீட்டுக்காரர் தனது சுயநலனுக்கான கோரிக்கைகளை மட்டுமே வைத்தார். அதனால் அவர் உள்பட யாருக்கும் எந்த பலனும் கிடைக்காமல் போய்விட்டது. 

அந்த எதிர்வீட்டுக்காரர் போல்தான் இங்கு உள்ள எதிர்க்கட்சிகளும், இந்த அரசின் செயல்பாடுகளால் விருதுகள் வாங்குகிறார்களே, மக்களிடம் நல்ல பெயர் ஏற்பட்டு விடுகிறதே, நாளை நமக்கு எதிர்காலம் உண்டா என்று எண்ணி பயந்து, பொறாமைப்பட்டு, தினமும் வாயைத்திறந்தால் பொய் பேசி, மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்" என தெரிவித்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்