Skip to main content

எடப்பாடி அரசு பதவி விலகக் கோரி  போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

Published on 25/05/2018 | Edited on 25/05/2018
eps

 

 


துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்று எடப்பாடி தலைமையிலான அரசு பதவி விலகக் கோரி 26.05.2018 சனிக்கிழமையன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தூத்துக்குடியில் அமைந்துள்ள உயிர்க்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரை கொலை செய்த பினாமி அரசு, இப்போது வரை அதன் குற்றத்தை உணர்ந்து கொள்ளவில்லை. மாறாக, உரிமை கோரி போராட்டம் நடத்திய மக்களை வன்முறையாளர்களாக அரசு சித்தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 41-ஆவது நாளில், அதாவது சரியாக இரு மாதங்களுக்கு முன் இதே நாளில் மார்ச் 24-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் கலந்து கொண்டனர். அப்போராட்டத்தின் போது பொது அமைதிக்கோ, ஒழுங்குக்கோ சிறிதும் பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோல், போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த 22&ஆம் தேதி போராட்டக்குழு அறிவித்திருந்த முற்றுகைப் போராட்டத்தையும் அரசு அனுமதித்திருந்தால் பொதுமக்கள் சில மணி நேரம் முற்றுகையிட்டு கலைந்து சென்றிருப்பார்கள். ஆனால், இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக தமிழக அரசும், காவல்துறையும் அனைத்து வகையான அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டன. இது தான் வன்முறைகளுக்கு முக்கியக் காரணமாகும்.
 

 

 

ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைக்கும் பினாமி ஆட்சியாளர்கள் பொதுமக்கள் தான் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சில கட்சிகளின்    தூண்டுதலால் தான் தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தியதாகவும், பொதுமக்கள் சட்டவிரோதமாக தாக்குதல் நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் அதனால் தான் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறியிருக்கிறார். இது மிகவும் அபத்தமான குற்றச்சாற்று.
 

யூதர்கள் படுகொலையை ஹிட்லரும், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையை தீவிரவாத ஒழிப்பு என்ற  பெயரில் இராஜபக்சேவும், உகாண்டாவில் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டதை இடி அமீனும் எவ்வாறு நியாயப்படுத்தினார்களோ, அதேபோல் தான் தூத்துக்குடியில் போராடிய அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த பினாமி எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார். மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. இத்தகைய போக்கை எந்தக் காலத்திலும் அனுமதிக்க முடியாது.
 

துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகூம் கூட பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோபத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை மூடி மறைக்கும்  முயற்சியில் தான் தமிழக அரசு ஈடுபடுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட  அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான அனைத்து அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்; இந்நிகழ்வு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்; இதற்கெல்லாம் மேலாக துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்று எடப்பாடி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்.

 

STERLITE


மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் 26.05.2018 சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் நாளை மறுநாள் காலை நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சேலத்திலும், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் மதுரையிலும், பொருளாளர் திலகபாமா விருதுநகரிலும் நடைபெறும் போராட்டங்களுக்கு தலைமையேற்பார்கள். மற்ற இடங்களில் பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மாநில  நிர்வாகிகள் தலைமையில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

“அநீதி இழைக்கப்பட்டுள்ளது” - மத்திய அமைச்சர் அதிரடி ராஜினாமா! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Central Minister resigns in bihar

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் பசுபதி பராஸ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன்  கூட்டணி அமைத்து பீகார் மாநிலத்தில், உள்ள லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டது. மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் அப்போது நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 39 இடங்களை வென்றது. இதில், பா.ஜ.க 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. மீதமுள்ள 1 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதால், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கடந்த 2020ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரர் பசுபதி குமார் பராஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, பசுபதி பராஸுக்கும், ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வானுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் காரணமாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனை தொடர்ந்து, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை பசுபதி பராஸும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) என்ற கட்சியை சிராஸ் பஸ்வானும் தொடங்கினர். 

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் சிராஜ் பஸ்வானுடன் கூட்டணி அமைப்பதாக பா.ஜ.க அறிவித்தது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட பா.ஜ.க ஒதுக்கீடு செய்யப்படாததால் பசுபதி குமார் பராஸ் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

Central Minister resigns in bihar

இது குறித்து, பசுபதி குமார் பராஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பீகார் மக்களவைத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 40 வேட்பாளர்கள் பட்டியில் நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் எங்கள் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. நான் மிகுந்த நேர்மையுடன் உழைத்தேன். எங்களுக்கும், எங்கள் கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.