/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/visagan-art-ed-1.jpg)
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பார் உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக வந்த புகார் அடிப்படையிலும், மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் சம்பந்தமாக அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த சோதனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (16.05.2025) காலை முதல் சோதனை நடத்தினர். இதற்கிடையே விசாகனை அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை 3 மணியளவில் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறையின் தென் மண்டல தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவரிடம் டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் 2வது நாளாக இன்றும் (17.05.2025) அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 27 மணி நேரத்தையும் கடந்து அமலாக்கத்துறையினரின் சோதனையானது நடைபெற்று வருகிறது. அங்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு உதவியுடன் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போன்று சூளைமேடு, தியாகராயநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியதாகவும் ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/visagan-art-ed_1.jpg)
முன்னதாக நேற்றைய சோதனையின் போது விசாகன் வீட்டருகே உள்ள சாலையோரம் கிழிந்த நிலையில் வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பான ஆவணங்கள் கிடந்தன. அதில் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்ட வார்த்தைகள் அந்த உரையாடலில் இடம்பெற்றிருந்தன. எனவே கிழிந்த நிலையில் இருந்த ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us