Advertisment

“வழக்கை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்” - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

ED alleges They are trying to divert the case

Advertisment

சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறை இந்த விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருந்த நிலையில் நீதிபதிகள் இருவரும் இந்த வழக்கில் இருந்து திடீரென விலகினர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு நேற்று (16.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், “டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1000 கோடிக்கும் மேல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளது. குறிப்பிட்ட முறையில் தான் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (17.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், “டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை. சோதனையின் போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை. பொய்யான தகவல்களைக் கூறி இந்த வழக்கைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமான பத்திரத்தில், “அமலாக்கத்துறையின் சோதனையின் போது ஊழியர்கள், அரசு அதிகாரிகள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது ஆகும். மேலும் இது மனிதத் தன்மையற்ற செயல் ஆகும்.

Advertisment

உடல் ரீதியாகவும் மட்டுமின்றி மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காலையில் பணிக்கு வந்தவர்கள் நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அதே சமயம் மறுநாள் காலையில் விரைவாக பணிக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டனர். இதன் காரணமாக 3 நாட்கள் தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து அமலாக்கத்துறை எவ்வித கவலையும் இன்றி நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சோதனையின் போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. குடும்பத்தினருக்குக் கூட உரியத் தகவல் தெரிவிக்க இயலவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Enforcement Department high court TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe