Skip to main content

'கர்நாடகத்துக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும்'-பெ.மணியரசன் பேட்டி

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

nn

 

தமிழ்த் தேசிய பேரியக்க மாநில தலைவர் பெ.மணியரசன் சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''மேட்டூர் அணையில் நீர்மட்டம் 77 அடி குறைந்துள்ளது வேதனையாக உள்ளது. தமிழ்நாடு நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9.19 டிஎம்சி நீரும், ஜூலை மாதம் திறந்துவிட வேண்டிய 31.24 டிஎம்சி நீரும் திறந்து விடப்படவில்லை. கர்நாடகம் தங்களுக்கு நீர் போதவில்லை கூறுகின்றனர். தற்போது அளவில் உள்ள நீர் விகிதாசார அடிப்படையிலாவது நீர் திறந்து விடப்பட வேண்டும், எனவே தமிழக அரசு கர்நாடகத்திற்கு வல்லுநர் குழுவை அனுப்பி இருக்கின்ற நீரை பகிரக் கர்நாடக அரசை வற்புறுத்த வேண்டும். தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர் பாழாகி உள்ளது. தோழமை கட்சியான காங்கிரஸை, திமுக கர்நாடக அரசிடம் பேசி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கர்நாடகத்துக்கு எதிராகப் பொருளாதார தடையை தமிழக அரசு விதிக்க வேண்டும்.

 

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணைய தலைவர் ஹல்தர் அணை கட்ட கர்நாடக அரசின் ரூ.9 ஆயிரம் கோடி செலவிலான திட்ட அறிக்கையை ஏற்று சுற்றுச்சூழல் துறைக்கும், காவிரி நிதி நீர் ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெயரளவிற்கு டெல்லி சென்று மனு அளித்து வந்துள்ளார். கடந்த காலங்களில் கர்நாடக அரசு பல அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய நீரை தடுத்துள்ளது. தற்போது 66 டிஎம்சி அளவிலான மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட வராது, காவிரி பாலைவனமாக மாறிவிடும். அதைத் தடுக்க காவிரி பங்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்தி தமிழக அரசு தடை பெற வேண்டும்.

 

பொது சிவில் சட்டத்தை, பாஜக அரசு கொண்டு வருவதால் அச்சம் உள்ளது. இந்துக்களை ஒன்றாகத் திரட்டும் தந்திரமாகத் தெரிகிறது. சட்டம் குறித்து முழு விவரம் தெரிவிக்காமல் மக்களிடையே கருத்து கேட்பது சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருக்கும் என்ற அச்சம் உள்ளது. திருமண வயது, திருமண முறிவு, வாரிசுரிமை போன்றவற்றில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவைதான், எனவே பாஜக அரசு சட்டம் பற்றிய முன்மொழிவுகளை மக்கன் முன் விவாதத்தற்கு முன் வைக்க வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அச்சட்டத்தை ஏற்க விரும்புவோர் ஏற்றுச் செயல்படுத்தலாம். ஏற்க விரும்பாதோர் அவர்களின் மத வழக்கப்படி திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம் என விருப்பத் தேர்வு உரிமை இருக்க வேண்டும்.

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்குவதை விட, அவரது ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும். அமெரிக்கா, ஜெர்மனி, சுவிஸ், கனடா போன்ற கூட்டாட்சி நாடுகளில் மாநில சட்டப்பேரவையை கலைக்கும் அதிகாரம் கூட்டாட்சிய மைய அரசுக்கு இல்லை. எனவே சமத்துவமான மாநில உரிமைகளைக் கொண்ட உண்மையான கூட்டாட்சியாக மாற்ற புதிய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவிற்கு தேவை. மேற்கொண்ட கோரிக்கைகள் குறித்து தமிழக முழுவதும் பரப்புரையை ஆகஸ்ட் மாதம் நடத்துவது எனத் தீர்மானித்துள்ளோம்'' என்றார்.

 

பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், துணைப் பொதுச்செயலாளர் க.அருண்பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்