Eastern coastal areas flourished in trade during Pandyas Cholas period

தமிழ்நாடு சுற்றுலாத் துறையும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த இடங்களை காண இரு நாட்கள் 'நெய்தல் மரபு நடைப் பயணம்' ஏற்பாடு செய்துள்ளது. எஸ்.பி.பட்டினத்தில் தொடங்கிய நிகழ்வில், ஆய்வு நடுவத்தின் தலைவர் முனைவர் எ.சுதாகர் தலைமையில், செயலாளர் ச.பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது, பாண்டிய, சோழ நாடுகளின் எல்லையான பாம்பாற்றின் கரையில் உள்ள சுந்தரபாண்டியன் பட்டினம், சோழகன்பேட்டையில் சமணம், பௌத்தம், சைவ, வைணவ மதங்கள் செழித்து இருந்துள்ளன. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவ்வூரைக் கைப்பற்றிய பின்னர், சுத்தவல்லியான சுந்தரபாண்டியபுரம் என மாற்றப்பட்டுள்ளது. புரம், பேட்டை ஆகியன வணிக நகரங்களைக் குறிக்கும் சொற்களாகும். இவ்வூரின் தெற்கே இடையமடத்தில் சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் புடைப்புச் சிற்பத்துடன் சமணப்பள்ளியும் அருகில் ஒரு பாதக்கோயிலும் உள்ளன. இங்கு 4 துண்டுக்கல்வெட்டுகள் உள்ளன. திருபுவனச் சக்கரவத்திகள் விக்கிரமபாண்டியனின் 5-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்ற பாண்டிய அரசு அதிகாரி பெயர் உள்ளது.

தீர்த்தாண்டதானத்தில் கி.பி.1269-ல் தங்கி இருந்த அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமியர் தலைமையிலான மணிக்கிராமம், சாமந்தப்பண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், தூசுவர், வாணியர், கரையார் ஆகிய வணிகக்குழுவினர் சிவன் கோயில் எதிரில் சிதைந்த நிலையில் இருந்த மண்டபத்தை பழுதுபார்க்க ஒப்புக்கொண்டுள்ளனர். இன்று அம்மண்டபமும் கல்வெட்டும் அழிந்துபட்டுள்ளன. தீர்த்தாண்டதானம் அருகிலுள்ள மருங்கூர் மற்றும் ஓரியூர் கோட்டை மகாலிங்க சுவாமி கோயில் பகுதி ஆகியவை தான் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மருங்கூர்பட்டினம், ஊணூர் என சமீபத்திய ஆய்வு நிறுவுகிறது. தொண்டியும், பெரியபட்டினமும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் நவரத்தின வணிகர்களால் பவித்திரமாணிக்கப்பட்டினம் என அழைக்கப்பட்டுள்ளன. தேவிபட்டினம் சிவன் கோயிலில் நானாதேசிவாசலும், திருஞானசம்மந்தன் வணிகர் தளமும் இருந்துள்ளன.

Advertisment

இயற்கையான உப்பங்கழிகளால் உருவான துறைமுகங்கள், வளமான நெல் விளைச்சல், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, அதிகளவிலான வணிகப் பாதைகள், பாதுகாப்பு ஆகிய காரணங்களால் 2000 ஆண்டுகளாக வெளிநாட்டு, உள்நாட்டு வணிகர்களும், வணிகக் குழுக்களும் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளனர் என்றார்.

பின்பு தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை, தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிற்றிங்கூர் மு.ராஜா, சி.பழனிசாமி, நா.ஶ்ரீதர், உள்ளிட்டோர் செய்தனர். இதில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 55 வரலாற்று ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் ஊர்கள் பற்றிய மரபு நடை கையேடு வெளியிடப்பட்டது.