Skip to main content

நீட் தேர்வில் அரசே தவறு செய்கிறது -ஈஸ்வரன்

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 

"அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் காலதாமதமாக தொடங்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர இடம் கிடைப்பதில்லை." என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

e r eswaran







இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"தனியார் பள்ளிகளில் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதமே தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. அரசாங்க பள்ளிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அக்டோபர் மாதம் தான் தொடங்குவார்கள் போல் தெரிகிறது. இந்த காலதாமதம்தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப்படிப்பு கனவுகளை தகர்த்தெறிவது. சென்ற ஆண்டு அரசாங்கத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் தான் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதன் காரணமாக தான் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்தது. ஆனால் தமிழக அமைச்சர் ஒருவர் இல்லை இருவருக்கு இடம் கிடைத்திருக்கிறது என்று பெருமையாக கூறியதையும் பார்த்தோம். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு தமிழக அரசு காலதாமதமாக தொடங்கியதே அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போனதற்கான முக்கிய காரணம்.


இந்த ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களுடைய நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் சென்ற ஆண்டை போலதான் அமைய வாய்ப்பிருக்கிறது. அரசாங்கம் தவறு செய்துவிட்டு ஆசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீதும் பழியை தூக்கிப்போடுவது நியாயமல்ல. 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வும் தொடர்கதையாகிவிட்டது. தமிழக அரசின் அலட்சியத்தால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, நடுத்தர மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் உடனடியாக பயிற்சி வகுப்புகளை தொடங்கி அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயார்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக கல்வி அமைச்சரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும்  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

கொ.ம.தே.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK Allotment of a constituency to kmdk in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க. ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை கொ.ம.தே.க. போட்டியிட்ட நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த முறை நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போன்றே இந்த தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.