ADVERTISEMENT

சிறுமியின் அவசர சிகிச்சைக்கான இ-பாஸ் இழுத்தடிப்பு... குடும்பமே தர்ணா போராட்டம்!!

07:34 PM May 05, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வெளி மாவட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு உரிய காரணங்களின் அடிப்படையில் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனன்றி பயணம் சாத்தியமில்லைதான்.

ADVERTISEMENT


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் புதுக்கிராமத்தின் ஆறுமுகம், முத்துமாரி தம்பதியரின் மகள் லட்சுமி ப்ரியா(12) இவர் கடந்த 5 ஆண்டுகளாக கிட்னி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதற்காக அவருக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிறுமி உடல் நலம் குன்றியதால் சிகிச்சைக்கு அழைத்து வர மதுரை மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஆனால் லாக் டவுன் காரணமாக சிகிச்சைக்காக மதுரை செல்வதற்கு உரிய ஆவணங்களோடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோட்டாட்சியரிடம் ஆன்லைனில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்திருக்கின்றனர் சிறுமியின் பெற்றோர். ஆனால் நாட்கள் கடந்தும் இ-பாஸ் கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த ஆறுமுகம் மனைவி முத்துமாரி, கிட்னி பாதிக்கப்பட்ட லட்சுமி பிரியா என்று குடும்பத்தோடு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் சென்றவர்கள் இ-பாஸ் வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இங்கு வந்த கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம், அரசு மருத்துவமனை மருத்துவரிடம் சிகிச்சைக்காக மதுரை செல்வதற்காக அனுமதியை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன் பின்னரே அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இதேபோன்று நெல்லை செல்வதற்கு விண்ணப்பித்தும் இ-பாஸ் கிடைக்காததால், இ-பாஸ் கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட முருகேசன், சித்ராதேவி தம்பதியினருக்கும் இ-பாஸ் கிடைப்பதற்கு அதிகாரிகள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

காலதாமதங்கள் சாமான்யவர்களையும் போராட வைத்துவிடுகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT