
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு வரும் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி வருவதால் அந்த இடம் முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து வருகின்றது.
இத்தகைய சூழலில் தான் வாரணாசியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிக்குப் பின்னர் விளையாட்டு வீரர்கள் சொந்த ஊர் திரும்ப கங்கா - காவேரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்தனர். இருப்பினும் மகா கும்பமேளா காரணமாக வாரணாசி ரயில் நிலையத்தில் நிலவிய கூட்ட நெரிசலாலும், முன்பதிவு செய்த ஏ.சி. பெட்டிக்கான இருக்கையை பிற பயணிகள் ஆக்கிரமித்ததாலும் விளையாட்டு வீரர்கள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை திரும்ப உதவுமாறு தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் உட்பட 11 மாற்றுத்திறனாளி வீரர்கள் தமிழக அரசுக்கு வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் வாரணாசியில் சிக்கித் தவித்து வந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வரத் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு உத்தரவிட்டுள்ளார். இதற்காகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்ட தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் விளையாட்டு வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.