Dy CM Inaugurated by Renovated Swimming Pool at Marina Beach

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 114க்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் ரூ.1.37 கோடி மதிப்பில் மெரினா நீச்சல் குளம் புதுப்பிக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (08.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெரினா நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான க்யூ.ஆர். கோடு (QR Code) கட்டண சேவையைத் தொடங்கி வைத்தார். மேலும் நீச்சல் குளத்தினை சுற்றி பார்வையிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மெரினா நீச்சல் குளமானது, 1942ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மாநகராட்சியிடம் இந்த நீச்சல் குளம் ஒப்படைக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 77 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் பராமரிப்பில் விடப்பட்ட இந்த நீச்சல் குளம் தற்போது ரூபாய் 1 கோடியே 37 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியால் நேரடியாக பராமரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தின் நடைபாதையை சீரமைத்து வர்ணம் பூசுதல், நடைபாதையில் புதிய கற்கள் மற்றும் ஓடுகள் பதித்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள், பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை அமைத்தல், குளத்தைச் சுற்றியுள்ள சுவரில் வண்ண ஓவியம் வரைந்து அழகுபடுத்துதல், ஒப்பனை அறை, குளியலறை, உடைமாற்றும் அறைகளை பழுதுபார்த்து மேம்படுத்துதல், போதிய மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Dy CM Inaugurated by Renovated Swimming Pool at Marina Beach

Advertisment

இந்த நீச்சல் குளம் 100 மீட்டர் நீளமும். 30 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. குறைந்த அளவாக 3.5 அடியும். அதிக அளவாக 5 அடி உயரமும் உடையது. மேலும், இந்த நீச்சல் குளமானது காலை 05.30 மணி முதல் மாலை 07.30 மணி வரை செயல்படும். காலை 08.30 மணி முதல் 09.30 மணி வரை பெண்களுக்கான நேரமாகும். இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதற்காக க்யூ.ஆர். கோடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் 1 மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு ரூ. 50 எனவும். இதனை ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகையாக ரூ. 45 என நிரணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ரூ.30 எனவும், ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகையாக ரூ.25 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நீச்சல் குளமானது, பராமரிப்புப் பணி காரணமாக திங்கட்கிழமை அன்று வார விடுமுறை விடப்படுகிறது. இந்த நீச்சல் குளம் நாளை (09.10.2024) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படும். இந்த நீச்சல் குளத்தில் 10 உயிர் பாதுகாவலர்கள், 8 தூய்மைப் பணியாளர்கள், 10 சுத்தம் செய்யும் பணியாளர்கள். 2 கண்காணிப்பாளர்கள், 6 பாதுகாவலர்கள், 2 எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் என மொத்தம் 38 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிட நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர்பாபு, கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் ஆர். பிரியா. மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு. மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.