Skip to main content

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராயும் குழுவை எதிர்த்த வழக்கில் இடையீட்டு மனு அளித்த திவிக மணி!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
Dvk Mani who filed the interlocutory petition in the case against the committee examining the vulnerabilities of NEET exam

 

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராயும் குழுவை எதிர்த்த வழக்கில் தன்னையும் இணைக்கும் வகையில் திராவிட விடுதலை கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இதில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த வழக்கை நிராகரிக்க கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவி நந்தினி ஆகியோர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி மூலமாக கொளத்தூர் மணி தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் நலன் சார்ந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையே  தூதுவர் என்ற அடிப்படையிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுவிடம் நீட் தேர்வின் சாதக பாதகங்கள் குறித்து அனைத்து தரப்பிலும் மனுக்கள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  

 

மேலும், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பை இழந்து தற்கொலைக்கு ஆளாகியுள்ள சம்பவங்களை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் கரு. நாகராஜன் கூறுவதுபோல சட்டத்தை மீறி குழு அமைக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு ஜூலை 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்