
சேவூர் ராமச்சந்திரன் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர். இவர் ஆரணி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரனின் இரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று அவரது மகன்களான விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் வீட்டிலும், திருவண்ணாமலையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் 20க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை தொடர்பாக வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்படி, கடந்த ஆண்டு சமூக வலைத்தளத்தில் வீடியோ மற்றும் ஆவணங்கள் வெளியாகி இருந்தது. அதில் 200 கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதிருப்பதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேவூர் ராமச்சந்திரன் 5 ஆண்டுக் காலம் அமைச்சராகப் பதவி வகித்தவர். அச்சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அவரது வீடு மற்றும் அவரது மகன்கள் வீடு மற்றும் கல்லூரி ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆரணியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.