ADVERTISEMENT

விரைவில் அவருக்கும் ஆப்பு இருக்கு... ஊரடங்கிலும் இப்படிப் பண்ணலாமா? காக்கிகள் வட்டாரத்தில் கலக்கம்!

01:24 PM May 01, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பணியில் காவல்துறையினர் பலரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் நிலையில், நாகை மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள் சிலர் வழக்கம்போல் வசூல் வேட்டையில் ஈடுபட்டு, ஆதாரத்தோடு சிக்கி பணியிடை நீக்கத்திற்கு ஆளாகியிருப்பது காக்கிகள் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

சம்பவம்- 1

சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளராகப் பணியில் இருந்தவர் ஸ்ரீபிரியா. இவரது கணவர் சோமசுந்தரம் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி காவல்நிலையத்தில் பணியில் இருந்தவர். ஸ்ரீபிரியாவுக்கு சீர்காழியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் பணி கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்தவாரம் சீருடையில் தனது சொந்தக்காரில் கணவர் சோமசுந்தரத்துடன் சென்று சீர்காழி தென்பாதியில் உள்ள மளிகைக் கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தினார். அங்கிருந்து, திருவெண்காடு காவல் சரகத்திற்கு உட்பட்ட மங்கைமடம் பகுதிக்குச் சென்று, மருந்துக் கடை ஒன்றில் தனது கணவர் மூலமாக 2,000 ரூபாய் மிரட்டி வாங்கியிருக்கிறார். அருகில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் பூக்கடைகளிலும் மிரட்டி பணம் வாங்கியுள்ளார். இதையெல்லாம் கவனித்த சிலர் சமூக ஊடகங்களில் செய்தியாகப் பதிவிட்டனர். இதைக் கவனித்த தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், ஸ்ரீபிரியா மீதும் அவரது கணவர் மீதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் ஸ்ரீபிரியாவும் அவரது கணவர் சோமசுந்தரமும் பணம் வாங்கிருப்பது உறுதியானதால் இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

சம்பவம் - 2

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் சிவப்பிரகாசம். இவருடைய சொந்த ஊர் ஜெயங்கொண்டம். கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர். வெளிப்பாளையம் காவல்நிலையச் சரகத்திற்கு உட்பட்ட மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் திறக்க, அதிரடியாக லஞ்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார். மளிகைக் கடைக்காரர்களோ மிரட்டலோடு, லஞ்சமாகப் பணம் கொடுத்ததையும் வீடியோ ஆதாரமாக்கி, நாகை எஸ்.பிக்கு புகாராகக் கொடுத்தனர். நேர்மையானவரகாவும், துணிவானவராகவும் செயல்பட்டுவரும் நாகை எஸ்.பி. செல்வ.நாகரெத்தினம், ஆதாரங்களை உறுதி செய்துகொண்டு அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், ஆய்வாளர் சிவபிரகாசமோ எஸ்.பி உத்தரவை மதிக்காமல், ஆயுதபடைக்கும் செல்லாமல் நாகை அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி எனக் கூறி உள்நோயாளியாக அட்மிட் ஆகிவிட்டார். இதனை அறிந்து கோபத்தின் உச்சத்திற்கே சென்ற செல்வ.நாகரத்தினம், ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மீது தொடர்ந்து வந்த லஞ்சப் புகார்களை வைத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய காவல் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். அதன்பின், ஆய்வாளர் சிவபிரகாசத்தைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன்.

சம்பவம்- 3

நாகை மாவட்டத்தின் கடைக்கோடியில் பணம் கொட்டும் காவல் நிலையமான மணல்மேட்டில் ஆய்வாளராக இருப்பவர், தியாகராஜன். ஊரடங்கில் மளிகைக் கடையினர் உள்ளிட்டவர்களிடம் அதிரடி காட்டி வசூல் வேட்டை நடத்திவருகிறார். தன்னார்வலர்கள் உதவி செய்ய அனுமதிகேட்டு சென்றாலே அவர்களிடம் கமிஷன் கேட்கிறாராம். கிராமங்களில் இளைஞர்கள் ஆர்வமாக மஞ்சள் தண்ணீர் தெளித்ததற்குகூட வழக்குப் போடுவதாக மிரட்டி வசூல் செய்திருக்கிறார்.

அதோடு ஏற்கனவே மது விற்பனையில் கோலோச்சிய சாராய வியாபாரிகளிடமும், மணல் கடத்தல்காரர்களிடமும் எப்போதும் போல எனக்கு மாமூல் வந்துவிடவேண்டும் என்றும் கேட்டு மிரட்டிவருகிறார். இவர் மீது டி.ஐ.ஜி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் வீடியோ ஆதாரத்தோடு சிக்கவைக்கப் போவதாகக் கடலங்குடியில் சிலர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து நாகை காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, பொதுமக்கள் அவதியுறும் நிலையிலும்கூட சிவப்பிரகாசத்தின் ஆட்டம் கட்டுக்கடங்காததாகவே இருந்தது. டீக்கடைகள் இல்லாததைச் சாதகமாக்கிக்கொண்டு சைக்கிள் மூலம் டிரம்மில் வைத்து விற்பனை செய்பவர்களிடம் தினசரி மாமூலைக் கறந்திருக்கிறார். அதேபோல் கிராமங்களில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்களைகூட இவர் விட்டுவைக்கவில்லை.


ஸ்ரீபிரியாவும் பணம் வாங்குவார். ஆனால் இந்த விவகாரத்தில் ஒரு சிலர் திட்ட மிட்டு அவரை சிக்க வைத்துள்ளனர். அவருக்கு வேண்டாத டி.எஸ்.பி. ஒருவரின் லாவகமான வேலைதான் இது. ஸ்ரீபிரியாவின் கணவர் கையூட்டுப்பெறுவதில் கில்லாடி. அவர் வாங்கியது காவல்துறை ஆய்வாளருக்குத் தெரியாது. ஆனால் கடைக்காரர் மூலம் டி.எஸ்.பி சிக்க வைத்துள்ளார்.

மணல்மேடு காவல்துறை ஆய்வாளர் குறித்தான தகவல் எஸ்.பி அலுவலகத்தில் ஏகப்பட்டது இருக்கிறது. அவர் லஞ்சம் வாங்குவதில் கை தேர்ந்தவர். அவரை மாவட்ட எஸ்.பி. பலமுறை எச்சரித்திருக்கிறார். விரைவில் அவருக்கும் ஆப்பு இருக்கும் என்கிறார்கள் விவரமாக.

கரோனா விவகாரத்தில் காவல்துறையினரின் செயல்பாடு மிக அபாரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், ஒருசிலர் செய்யும் இதுபோன்ற செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறையினரையும் மக்கள் தவறாக நினைக்கும்படி ஆகிவருவது தான் வருத்தமாக இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT